தமிழ்நாடு

அனைத்து மாவட்டங்களிலும் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடைபெறும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Update: 2022-06-25 06:50 GMT
  • மேற்படிப்புகள் என்னென்ன உள்ளது என்பதெல்லாம் நீங்கள் இணையத்தை பார்த்து தெரிந்து கொள்ள கூடிய சூழல் இப்போது வந்துள்ளது. இருந்தாலும் உங்கள் மதிப்பெண் அடிப்படையில் எந்தெந்த படிப்புகளை தேர்ந்தெடுக்கலாம்.
  • எதிர்கால வேலைவாய்ப்பு எப்படி இருக்கிறது? இதையெல்லாம் எடுத்து கூறி, நாங்களும் உங்களுக்கு வழிகாட்டுவதற்கான வாய்ப்புதான் இந்த நிகழ்ச்சி.

சென்னை:

'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பிளஸ்-2 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழி காட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை நடைபெற்றது.

இதில் சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்த இனிய காலை வேளையில் உங்களை எல்லாம் பார்க்கும் போது எனக்கு உற்சாகமாக இருக்கிறது. கடந்த 5, 6 நாட்களாக எனக்கு காய்ச்சல் ஏற்பட்டு அதனால் உடல் சோர்வான நிலையில் இருந்த எனக்கு இந்த நிகழ்ச்சி, அந்த சோர்வுகள் எல்லாம் நீங்கி ஒரு புத்துணர்ச்சியும், உற்சாகத்தையும் தரும் நிலையில் உங்கள் முன்னாள் நின்று கொண்டிருக்கிறேன்.

கள்ளம் கபடம் இல்லாத உங்கள் முகங்களில் இருக்கக் கூடிய இந்த இயல்பான அழகுதான் இனிமையான அனுபவத்தை தருகிறது.

இந்த மாநிலத்தின் முதல்-அமைச்சராக மட்டும் நான் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை. உங்களை எல்லாம் எனது சொந்த பிள்ளைகள் என்று கருதி அந்த உணர்வோடு உங்களை நான் வாழ்த்த வந்திருக்கிறேன்.

அரசு அதிகாரிகள் கூட இதனை வழிகாட்டும் நிகழ்ச்சி என்று சொன்னார்கள். நம்மை விட இந்த காலத்து பிள்ளைகள் மிக விவரமானவர்கள்.

நான் சொல்வது உண்மை தானே? அதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள் தானே? எனவே உங்களுக்கு எல்லாமே தெரியும். ஏனென்றால் எல்லோர் கையிலும் இப்போது மொபைல் போன் இருக்கிறது. இந்த உலகமே உங்கள் விரல் நுனிக்கு வந்துள்ளது.

மேற்படிப்புகள் என்னென்ன உள்ளது என்பதெல்லாம் நீங்கள் இணையத்தை பார்த்து தெரிந்து கொள்ள கூடிய சூழல் இப்போது வந்துள்ளது. இருந்தாலும் உங்கள் மதிப்பெண் அடிப்படையில் எந்தெந்த படிப்புகளை தேர்ந்தெடுக்கலாம்.

எதிர்கால வேலைவாய்ப்பு எப்படி இருக்கிறது? இதையெல்லாம் எடுத்து கூறி, நாங்களும் உங்களுக்கு வழிகாட்டுவதற்கான வாய்ப்புதான் இந்த நிகழ்ச்சி.

நாங்கள் ஏற்படுத்தி உள்ள இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இதனை உற்சாகம் ஊட்ட கூடிய நிகழ்ச்சியாக உங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். நீங்கள் உங்கள் வாழ்க்கையிலே பள்ளிக்கல்வி என்ற ஒரு படியை தாண்டி கல்லூரி கல்வியில் அடியெடுத்து வைக்க போகிறீர்கள்.

மாணவர்களாகிய நீங்கள்தான் இந்த மாநிலத்தின் அறிவு சொத்துக்கள். உங்களை வளர்த்தெடுக்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு நான் முதல்-அமைச்சராக இருக்கலாம். ஆனால் நீங்கள் அனைவரும் ஒவ்வொரு துறையிலும் முதல்வனாக விளங்க வேண்டும் என்ற பரந்த உள்ளத்தோடு, பரந்த எண்ணத்தோடு தொடங்கப்பட்ட திட்டம்தான் நான் முதல்வன் என்கிற இந்த திட்டம். அதன் ஒரு அங்கமாகத்தான் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருக்கிறது.

'பச்சைத் தமிழர்' என்று போற்றப்பட்ட பெருந்தலைவர் காமராசர் தமிழகம் முழுவதும் பள்ளிகளைத் திறந்தார். முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர், தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகளை, பல்கலைக் கழகங்களை உருவாக்கினார்.

இன்று நாங்கள் உயர்கல்வியை, ஆராய்ச்சிக் கல்வியை ஊக்கப்படுத்தி வருகிறோம்.

பள்ளிக் கல்வியாக இருந்தாலும், உயர்கல்வியாக இருந்தாலும், திறமை மற்றும் அறிவுசார் கல்வியாக அதனை மாற்றிக் காட்டி வருகிறது நம்முடைய தமிழ்நாடு அரசு. இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட தமிழகம் உயர, இதுதான் காரணமாக அமைந்திருக்கிறது.

மிக அதிகளவு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது. கல்வியில் உயர்ந்த தமிழ்நாடாக தற்போது விளங்குகிறது.

இங்கே, உங்களுக்கான அடுத்த கட்டத் திட்டங்கள் குறித்து விளக்கிப் பேச இருக்கிறார்கள். இங்குப் பல்வேறு கல்வி நிறுவனங்களின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன, நான் கூட அதை பார்த்துவிட்டுத்தான் இந்த மேடைக்கு வந்தேன். அவற்றையும் நீங்கள் தெளிவாக, பொறுமையாக அதைப் பார்த்து தகவல்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த 'நான் முதல்வன்-கல்லூரிக் கனவு' நிகழ்ச்சியானது, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஜூன் 29, 30 மற்றும் ஜூலை 1, 2 ஆகிய நாட்களில் நடக்கப்போகிறது.

2026-ம் ஆண்டுக்குள் தமிழகத்தின் 2 மில்லியன் இளைஞர்களின் திறன் மேம்பாடு அடைய வேண்டும் என்று நான் அடிக்கடி சொல்லி வருகிறேன். அதில் நீங்களும் இடம்பெற்றுள்ளீர்கள்.

அதேபோல, 2030-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும் என்று சொல்லி வருகிறேன். அதில் உங்கள் பங்கும் இருக்க வேண்டும்.

வாருங்கள்! உலகை வெல்லும் இளைய தமிழகத்தைப் படைப்போம்! வாருங்கள்! உலகை வெல்லக்கூடிய இளைய தமிழகத்தைப் படைப்போம்!

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் இறையன்பு, டி.ஜி.பி. சைலேந்திரபாபு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News