தமிழ்நாடு

2-ம் கட்டமாக 21 இடங்களில் விஜய் நூலகம்: புஸ்சி ஆனந்த் தகவல்

Published On 2023-11-19 09:04 GMT   |   Update On 2023-11-19 09:04 GMT
  • விஜய் ஆலோசனையின்படி மக்கள் நலன் திட்டங்களை இயக்கத்தின் மூலம் சிறப்பான முறையில் செய்து வருகிறோம்.
  • நூலகத்தில் அமர்ந்து படிக்கும் வசதியும், வீட்டிற்கு புத்தகங்களை எடுத்து சென்று படிக்கும் வசதிகளையும் ஏற்பாடு செய்துள்ளோம்.

சென்னை:

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இரவு நேர பாட சாலை திட்டத்தை தொடர்ந்து அடுத்த கட்டமாக இளைஞர்கள், மாணவ-மாணவிகளின் வாசிக்கும் திறனை மேம்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் தளபதி விஜய் நூலக திட்டம் நேற்று 11 இடங்களில் தொடங்கப்பட்டது.

முதற்கட்டமாக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் தொகுதி சி.ஐ.டி.யூ காலனி, பாலாஜி நகர் 3-வது தெருவில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து பல்லாவரம், அரியலூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, வேலூர், சென்னை உள்பட 11 இடங்களில் நேற்று நூலகம் தொடங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக வருகிற 23-ந்தேதி நெல்லை மாவட்டத்தில் 5 இடங்களிலும் கோவையில் 4 இடங்களிலும், ஈரோட்டில் 3 இடங்களிலும், தென்காசியில் 2 இடங்களிலும், சேலம், புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருப்பூர் ஆகிய 21 இடங்களிலும் புதிய நூலகம் திறக்கப்பட உள்ளது.

நூலக திட்டம் குறித்து மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கூறியதாவது:-

விஜய் ஆலோசனையின்படி மக்கள் நலன் திட்டங்களை இயக்கத்தின் மூலம் சிறப்பான முறையில் செய்து வருகிறோம். அந்த வகையில் மாணவ-மாணவிகள், இளைஞர்களின் பொது அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் நூலக திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

முதற் கட்டமாக நேற்று 11 இடங்களில் தொடங்கி உள்ளோம். இரண்டாம் கட்டமாக வருகிற 23-ந்தேதி 21 இடங்களில் புதிய நூலகங்கள் தொடங்க உள்ளோம். விரைவில் 234 தொகுதிகளிலும் படிப்படியாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்களின் பார்வை சமூக வலைதளங்கள் பக்கம் திரும்பியுள்ளது. இதனால் பொதுமக்களிடையே வாசிப்பு திறன் குறைந்து வருகிறது.

இதை கட்டுப்படுத்தும் விதத்தில் நூலக திட்டத்தை கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் விஜய் ஆலோசனையின் பேரில் செயல்படுத்தி வருகிறோம். அவரவர் வசதிக்கேற்ப நூலகத்தில் அமர்ந்து படிக்கும் வசதியும், வீட்டிற்கு புத்தகங்களை எடுத்து சென்று படிக்கும் வசதிகளையும் ஏற்பாடு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News