தமிழ்நாடு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை- 190 நடமாடும் மருத்துவ முகாம்கள்

Published On 2023-12-22 05:41 GMT   |   Update On 2023-12-22 05:41 GMT
  • தூத்துக்குடி நகரம் முழுவதும் கடந்த 5 நாட்களாக வெள்ளத்தில் தத்தளித்தது.
  • சமையலறை முழுவதும் சேதமடைந்து விட்டது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 16, 17, 18-ந் தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

தூத்துக்குடி நகரம் முழுவதும் கடந்த 5 நாட்களாக வெள்ளத்தில் தத்தளித்தது. மழை ஓய்ந்ததை தொடர்ந்து வெள்ளம் வடிந்து தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது.

அதே நேரம் தூத்துக்குடி மாநகர பகுதியில் இன்னும் சில இடங்களில் வெள்ளம வடியவில்லை. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தவித்த பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 6-வது நாளாக இன்றும், மாவட்டத்தில் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்தப்பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள சேத இடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு சென்ற நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தூத்துக்குடி வந்தார்.


கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ள தூத்துக்குடி அரசு மருத்துவ மனையை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நடமாடும் மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் 190 நடமாடும் மருத்துவம் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு குழுவிலும் மருத்துவர் உள்ளிட்ட 4 பணியாளர்கள் உள்ளனர். நேற்று மட்டும் 2,882 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 67 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றனர்.

மேலும், மதுரை, கன்னியாகுமரி ஆகிய மாவட்ட மருத்துவமனைகளில் இருந்து டாக்டர்கள், செவிலியர்கள் துத்துக்குடி வர இருக்கிறார்கள்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகம் தாழ்வாக உள்ளதால் இங்கு முதல் நாளில் இருந்தே வெள்ளம் வரத்தொடங்கியது. உடனடியாக இங்குள்ள ஊழியர்களே முதல் தளத்தில் இருந்து நோயாளிகளை மேல் தளத்திற்கு அழைத்து சென்றனர். அங்கிருந்த சிறிய உபகரணங்களும், மேல் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சமையலறை முழுவதும் சேதமடைந்து விட்டது.

மேலும் இதயவியல் துறையில் இருந்த ரூ.2 கோடி மதிப்பிலான எந்திரம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி பழுதானது. அதனை சரிசெய்து மீண்டும் இயக்குவது தொடர்பாக ஆய்வு செய்வதற்கு சென்னையில் இருந்து நிபுணர்கள் வர உள்ளனர். மாவட்டம் முழுவதும் சில ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்னும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மின்மோட்டார்கள் மூலம் அதனை முற்றிலும் அகற்ற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வெள்ளம் அகற்றப்பட்டு விடும்.

தற்போது அரசு சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் மருத்துவ முகாம் தொடர்பாக தனியார் மருத்துவமனைகளுடன் பேசி வருகிறோம். காப்பீடு திட்டம் உள்ள பெரிய மருத்துவமனை சார்பில் ஞாயிற்றுக்கிழமை முகாம் நடடத்தப்பட உள்ளது.

உயிர் பாதிப்பு இல்லா வகையில் மருத்துவமனை செயல்பாடு சிறப்பாக உள்ளது. மேலும், குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பானதால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மக்கள் காய்ச்சிய குடிநீரை குடிக்க வேண்டும்.

உயிரிழப்புகளை பொறுத்தவரை மாவட்ட நிர்வாகம் தான் கணக்கெடுத்து வருகிறது. அவர்கள் முறையாக அறிவிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News