தமிழ்நாடு

135 அடியை எட்டிய முல்லைபெரியாறு அணை நீர்மட்டம்

Published On 2022-07-16 04:06 GMT   |   Update On 2022-07-16 04:06 GMT
  • உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 146 அடி வரை தேக்கப்படுகிறது.
  • தொடர்மழை காரணமாக வைகை அணை நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

கூடலூர்:

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று முன்தினம் 130.85 அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 133 அடியாகவும், இன்று காலை 135 அடியாகவும் உயர்ந்துள்ளது. 2 நாளில் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 146 அடி வரை தேக்கப்படுகிறது. அணைக்கு விநாடிக்கு 6700 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக 1867 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் 13 ஷட்டர்களுக்கு முன்பு உள்ள தண்ணீர் கடல்போல் காட்சியளிக்கிறது. பகல் பொழுதில் வெயில் அடித்த போதிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீர்மட்டம் உயர்ந்து வருவதால் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் அணைக்கு வரும் நீர்வரத்து, மழையளவு, வெளியேறும் கசிவுநீர் உள்ளிட்டவற்றை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

தொடர்மழை காரணமாக வைகைஅணை நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. 71 அடி உயரம் உள்ள அணையின் தற்போதைய நீர்மட்டம் 56.96 அடியாக உள்ளது. வரத்து 1823 கனஅடி, திறப்பு 969 கனஅடி, இருப்பு 3046 மி.கனஅடி.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.20 அடியாகவும், சோத்துப்பாறை நீர்மட்டம் 71.34 அடியாகவும், உள்ளது.

பெரியாறு 52.6, தேக்கடி 21.2, கூடலூர் 3, உத்தமபாளையம் 1.2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News