தமிழ்நாடு

என்ஜினீயரிங், கலை அறிவியல் கல்லூரியில் சேர விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

Published On 2022-07-08 07:46 GMT   |   Update On 2022-07-08 07:46 GMT
  • உதயநிதி ஸ்டாலினுக்கு சிண்டிகேட் உறுப்பினர் பதவி எதுவும் வழங்கப்படவில்லை.
  • அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்துவது குறித்து கவர்னர் தான் முடிவு செய்ய வேண்டும்.

சென்னை:

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னை தலைமை செயலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்புத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கலை அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு கால அவகாசம் தேதி குறிப்பிடாமல் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 163 கலை அறிவியல் கல்லூரியில் சேருவதற்கு நேற்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தேர்வு முடிவு வெளியான பிறகு 5 நாட்கள் வரை விண்ணப்பிக்கலாம். இதேபோல பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க 17-ந்தேதி கடைசி நாளாக இருக்கும் நிலையில் அதற்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்புக்கு செல்போன் வழியாகவும், நூற்றுக்கும் மேற்பட்ட உதவி மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் ஆர்ட்டி பிஷியல் இன்டலிஜென்ட் டேட்டா சயின்ஸ் என்ற பாடப்பிரிவு புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்துவது குறித்து கவர்னர் தான் முடிவு செய்ய வேண்டும்.

அரசு பள்ளியில் படித்து உயர் கல்வியை தொடர்கிற மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தில் இதுவரை 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். முதல் ஆண்டு மட்டுமின்றி 1, 2, 3-ம் ஆண்டு மாணவிகளுக்கும் வழங்க ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. கல்லூரி தொடங்கிய பிறகு உதவித்தொகை வழங்கப்படும்.

உதயநிதி ஸ்டாலினுக்கு சிண்டிகேட் உறுப்பினர் பதவி எதுவும் வழங்கப்படவில்லை. சிண்டிகேட் உறுப்பினராக இருந்தால் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று சொல்லவில்லை.

மாணவர்கள் சேற்றில் வீசிய பந்தாக இருக்கக்கூடாது. சுவற்றில் வீசிய பந்தாக இருக்க வேண்டும். இன்றைய மாணவர்கள் இளைஞர்கள் அரசியலை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

டான்செட் முதுநிலை தேர்வு விரைவில் நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உடன் இருந்தார்.

Tags:    

Similar News