தமிழ்நாடு

தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் தமிழ்நாட்டில் தாமரை மலரும்- கவிஞர் முத்துலிங்கம்

Update: 2022-06-28 05:52 GMT
  • தனிமனித ஒழுக்கம் சரியாக இருந்தால்தான் சமுதாயமும் ஒழுக்கமுள்ள சமுதாயமாக மாறும்.
  • திருக்குறள் ஒன்றுதான் இருக்கின்ற உலகத்தில் வாழுகின்ற மக்களுக்கு வழிகாட்டக் கூடிய நூலாக இருக்கிறது.

கோவை:

கவிஞர் ப.ஜீவானந்தம் எழுதிய 'ஈரநிலம்' என்ற புத்தக வெளியீட்டு விழா அண்மையில் கோவையில் நடைபெற்றது. விழாவுக்கு துடியலூர் தமிழ்ச் சங்கத்தலைவர் கலையரசன் தலைமை வகித்தார்.

புத்தகத்தை வெளியிட்டுத் திரைப்படப்பாடலாசிரியரும், முன்னாள் அரசவைக் கவிஞரும் முன்னாள் சட்டமன்ற மேலவை உறுப்பினரும் அ.தி.மு.க. நட்சத்திரப் பேச்சாளருமான கவிஞர் முத்துலிங்கம் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

நாட்டிலே இப்போது கலாச்சாரச் சீரழிவுகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஒழுக்கக்கேடுகள் பெருகி விட்டன. தனிமனித ஒழுக்கம் சரியாக இருந்தால்தான் சமுதாயமும் ஒழுக்கமுள்ள சமுதாயமாக மாறும். ஒழுக்கம் உயிரைவிட உயர்ந்தது என்பார் வள்ளுவர்.

உலக மொழிகளிலே தமிழில் உள்ளது போல் நீதி நூல்கள் எந்தமொழியிலும் இல்லையென்றும் அதில் தலையாய நூல் திருக்குறள் என்றும் முதன்முதல் கூறியவர் வீரமாமுனிவர்.

இந்தியாவில் எத்தனையோ தத்துவ நூல்கள் இருக்கின்றன. அவையெல்லாம் இல்லாத உலகத்திற்குச் செல்லாத வழியைக் காட்டிக் கொண்டிருக்கக்கூடிய நூல்கள். திருக்குறள் ஒன்றுதான் இருக்கின்ற உலகத்தில் வாழுகின்ற மக்களுக்கு வழிகாட்டக் கூடிய நூலாக இருக்கிறது. ஆகவே நூல்களில் சிறந்தது திருக்குறள் என்று கூறினார் ஜெர்மன் நாட்டு மொழியியல் அறிஞரும் நோபல் பரிசு பெற்றவருமான ஆல்பர்ட் சுவைசர்.

அப்படிப்பட்ட நூலில் இருந்து மேற்கோள்காட்டி அடிக்கடி மோடி பேசி வருகிறார். பேசுவதோடு நின்று விடாமல் திருக்குறளுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் இந்தியாவின் தேசிய நூலாகத் திருக்குறளை அவர் அறிவிக்க வேண்டும்.

மேலும் தமிழ் சிறந்த மொழியென்றும் மிகவும் பழமையான மொழியென்றும் தமிழ்நாட்டிற்கு வரும் போதெல்லாம் பேசுகிறார். வடமாநில மொழிகளில் ஒன்றான இந்தியை வடமாநிலங்களில் ஆட்சி மொழியாக ஆக்கியிருப்பதைப் போல தென்னிந்திய மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியான தமிழை இந்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாகவும் அவர் ஆக்க வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகத் தமிழைக் கொண்டு வர வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஸ்டாலின் சொன்னபோது அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவோம் என்று உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா கூறியிருக்கிறார். ஆகவே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் தமிழைக் கொண்டு வர வேண்டும்.

ஆக இந்திய ஆட்சி மொழியாகவும் உயர்நீதி மன்ற வழக்காடு மொழியாகவும் தமிழைக் கொண்டு வருவதோடு திருக்குறளையும் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் தமிழ்நாட்டில் தாமரை மலர முடியுமே தவிர அண்ணாமலை போன்றவர்களின் ஆர்பாட்டத்தாலோ, அ.தி.மு.க.வில் இருந்து சிலரை வளைத்துப்போடுவதாலோ தமிழ்நாட்டில் தாமரை காலூன்ற முடியாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஈழத்தழிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசாங்கம் இப்போது இந்தியாவிடம் பண உதவி, எரிபொருள் உதவி, உணவுப்பொருள் உதவியை எதிர்பார்க்கிறது. இந்தியாவும் உதவி வருகிறது. என்னதான் உதவி செய்தாலும் சீனாவையும் பாகிஸ்தானையும்தான் அது நட்பு நாடாகக் கருதுகிறதே தவிர இந்தியாவைப்பகை நாடாகவே உள்ளுக்குள் நினைக்கிறது.

அதனால் இந்தியா இலங்கைக்கு உதவி செய்ய நினைத்தால், அங்குள்ள ஈழத்தமிழர்களுக்கு வடக்கு கிழக்கு மாகாணத்தைக் கொடுத்து ஆட்சி அதிகாரத்தை அவர்களே அமைத்துக்கொள்ளும் வகையில் அவர்களுக்கு சகல உரிமைகளையும் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்க வேண்டும். அதற்கு சம்மதித்தால் உதவலாம். இல்லையென்றால் இலங்கை அரசுக்கு உதவு வது என்பது பாம்புக்குப் பால் வார்த்த கதை ஆகிவிடும்.

தமிழர்களைக் கொன்ற பாவம்தான் சாபமாக வந்து சிங்களர்களே, சிங்கள அரசை எதிர்க்கக்கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது. ஈழத்தமிழர்கள் போராட்டத்தில் சிங்கள அரசுக்கு உதவியாக இருந்த இந்தியாவும் இதை உணர்ந்து திருந்த வேண்டும்.

இவ்வாறு கவிஞர் முத்துலிங்கம் பேசினார்.

Tags:    

Similar News