தமிழ்நாடு

ஈஷா யோகா மையத்தில் ஷாரிக் புகைப்படம் எடுத்ததை நேரில் பார்த்தேன்- கால்டாக்சி டிரைவர் தகவல்

Published On 2022-11-24 07:29 GMT   |   Update On 2022-11-24 09:03 GMT
  • குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஷாரிக் கோவை வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு சென்றது உறுதியானது.
  • ஷாரிக் ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலையை புகைப்படம் எடுத்ததை நேரில் பார்த்ததாக கோவையை சேர்ந்த கால்டாக்சி டிரைவர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.

கோவை:

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்தவர் முகமது ஷாரிக்(27).

இவன் கர்நாடக மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டை வெடிக்க வைத்து தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டுள்ளான்.

குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஷாரிக் கோவை வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு சென்றது உறுதியானது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு முன்பு குக்கர் வெடிகுண்டை கையில் வைத்து போட்டோ எடுத்து கொண்ட முகமது ஷாரிக், ஈஷா சென்றதற்கான காரணம் என்ன? ஒருவேளை போலீசாரை வழக்கில் இருந்து திசை திருப்புவதற்காக இப்படி செய்தானா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்பதும் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் முகமது ஷாரிக் ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலையை புகைப்படம் எடுத்ததை நேரில் பார்த்ததாக கோவையை சேர்ந்த கால்டாக்சி டிரைவர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.

இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அவரிடம், நீங்கள் பார்த்தது முகமது ஷாரிக் தானா? அவரை எப்படி தெரியும்? அங்கு புகைப்படம் மட்டும் தான் எடுத்தாரா? என பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரித்தனர்.

மேலும் உங்களுக்கு அவன் தான் ஷாரிக் என்பது எப்படி தெரியும் எனவும் விசாரணை நடத்தினர். அதற்கு அவர் 2 நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் அவன் போட்டோவுடன் செய்தி வெளியானதை பார்த்தேன். அப்போது தான் எனக்கு நினைவுக்கு வந்தது என்று தெரிவித்தாக கூறப்படுகிறது.

மேலும் ஈஷா யோகா மையத்தில் உள்ள சி.சி.டிவி கேமராக்களில் தீபாவளி தினத்தில் பதிவாகி உள்ள காட்சிகளை பார்த்தால் தெரியும் என்றும் அவர் போலீசாரிடம் தெரிவித்தார். ஆனால் அன்றைய தினம் ஷாரிக் கர்நாடகாவில் இருந்தது அவரது செல்போன் சிக்னல் மூலம் தெரியவந்தது.

இவர் கூறும் தகவல்கள் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இவர் கூறுவது உண்மைதானா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News