தமிழ்நாடு

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா- கோவையில் பொது இடங்களில் முக கவசம் கட்டாயம்

Published On 2022-06-25 04:16 GMT   |   Update On 2022-06-25 06:14 GMT
  • பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது முககவசம் அணிவதை கட்டாயமாக்கி கொள்ள வேண்டும்.
  • கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த சுகாதாரத்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவை:

கொரோனா தொற்றின் முதல் மற்றும் இரண்டாம் அலைகள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் தடுப்பூசிகள் பெரும் சதவீதம் செலுத்தப்பட்டு இருந்ததால் 3-வது அலை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

அதே சமயம் கொரோனா 4-வது அலை தமிழகத்தில் மெல்ல அதிகரித்து வருவதாக மருத்துவ துறையினர் கூறுகின்றனர். கோவையிலும் சமீப நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படு பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தீவிரமாக பின்பற்றவும், கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்தவும், அனைத்து மாவட்ட சுகாதார துறையினருக்கும் தமிழக சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

இதை தொடர்ந்து ஒவ்வொரு வட்டாரத்திலும் குறைந்தபட்சம் 100 பேருக்கு கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வட்டார சுகாதார அலுவலர்களுக்கு மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 64 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு அதிகம் பேர் கோவையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவையில் இதுவரை ஒட்டுமொத்தமாக 3 லட்சத்து 30 ஆயிரத்து 464 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சைக்கு பின்னர் 3 லட்சத்து 27 ஆயிரத்து 674 பேர் குணமடைந்துள்ளனர். 2,617 பேர் உயிரிழந்துள்ளனர். 288 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு குறித்து மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் கூறியதாவது:-

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது முககவசம் அணிவதை கட்டாயமாக்கி கொள்ள வேண்டும். இது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணி தொடங்கும்.

வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை இணைந்து இந்த பணிகளை மேற்கொள்வர். கோவையில் தற்போது 100 பேருக்கு பரிசோதனை செய்தால் 2 பேருக்கு தொற்று உறுதியாகிறது. கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த சுகாதாரத்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News