தமிழ்நாடு

கல்லூரி பேராசிரியர்கள் பணியிட மாற்ற கலந்தாய்வு ஆண்டு தோறும் நடத்தப்பட வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்

Published On 2022-08-03 06:09 GMT   |   Update On 2022-08-03 06:09 GMT
  • வெளியூர்களில் பணியாற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • கல்லூரி பேராசிரியர்களுக்கு நியாயமான முறையில் பணியிட மாறுதல் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

சென்னை:

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு கடந்த 2019-ம் ஆண்டு முதல் கடந்த 4 ஆண்டுகளாக பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவில்லை. அதனால் குடும்பத்தைப் பிரிந்து வெளியூர்களில் பணியாற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர் சங்கங்கள் உயர் கல்வித் துறைக்கு இது தொடர்பாக கோரிக்கை விடுத்தும் அது ஏற்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் நிர்வாகக் காரணம் என்று கூறி பணியிட மாற்றங்கள் வழங்கப்படுகின்றன. அதனால் தகுதியானவர்களுக்கு இட மாறுதல் கிடைப்பதில்லை.

தகுதியானவர்களுக்கு, நியாயமான, சட்டப்பூர்வ வழியில் இடமாறுதல் வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது தான் பணியிட மாறுதல் கலந்தாய்வு ஆகும். இதில் எந்த முறைகேடுகளும் நடப்பதில்லை. பள்ளிக்கல்வித் துறையில் இந்த முறையில் முறையாக இடமாறுதல் வழங்கப்படுகிறது.

அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். அதன் மூலம் தகுதியும், தேவையும் உள்ள கல்லூரி பேராசிரியர்களுக்கு நியாயமான முறையில் பணியிட மாறுதல் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News