தமிழ்நாடு

செம்பரம்பாக்கம் ஏரி

சென்னையில் இன்னும் ஒரு ஆண்டுக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது- குடிநீர் வாரிய அதிகாரி தகவல்

Published On 2022-09-20 06:43 GMT   |   Update On 2022-09-20 06:43 GMT
  • பூண்டி ஏரியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் நீர்வளத்துறையால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • எதிர்வரும் வடகிழக்குப் பருவமழையின் மூலம் அனைத்து ஏரிகளும் நிரம்ப வாய்ப்புள்ளது.

சென்னை:

சென்னை நகருக்கு புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை, வீராணம் ஆகிய ஏரிகளில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மொத்தம் 13,222 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரிகளில் தற்போது 8,566 கனஅடி நீர் இருப்பு உள்ளது. இது 64.79 சதவீதம் ஆகும்.

வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1,465 மில்லியன் கனஅடி ஆகும். கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியின் மொத்த கொள்ளளவு 500 மில்லியன் கனஅடி ஆகும்.

இந்த 2 ஏரிகளிலும் முழு கொள்ளளவு தண்ணீர் உள்ளது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கனஅடி. இங்கு 2,894 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கனஅடி. இங்கு 3,033 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கனஅடி ஆகும். இங்கு 540 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1,081 ஆகும். இந்த ஏரியில் 134 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. தற்போதைய நிலவரப்படி சென்னைக்கு அடுத்த ஓராண்டுக்கு தடையின்றி குடிநீர் வழங்கும் வகையில் ஏரிகளில் நீர் இருப்பு உள்ளது. எனவே இன்னும் ஒரு ஆண்டுக்கு சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ்குமார் கூறி இருப்பதாவது:-

சென்னை பெருநகர மக்களுக்கு தற்போது ஏரிகள் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் மூலம் நாளொன்றுக்கு 1030 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

பூண்டி ஏரியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் நீர்வளத்துறையால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறையின் நீரியல் மற்றும் நீர் நிலையியல் மையத்திற்கு நீர் வழங்குவதற்கான இரண்டு கிணற்று மதகு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இப்பணிகளுக்கான மறு சீரமைப்பு கட்டுமானம் தற்பொழுது 50 சதவீதம் பூர்த்தி அடைந்துள்ளது. தற்சமயம், கிருஷ்ணா நதிநீர் திட்டத்தில் இருந்து பூண்டி ஏரிக்கு நீர்வரத்து மேற்கண்ட பணிகள் நடைபெறுவதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இப்பணிகள் முழுமையாக நிறைவடைந்தவுடன் பூண்டி ஏரிக்கு சீரான குடிநீர் வந்தடையும்.

வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்கும் மழை நீரை எப்பொழுதும் உள்ளது போல் சேமிப்பதற்கு இந்த கட்டுமானப் பணிகளால் தடையேதுமில்லை சோழவரம் ஏரிக்கு பூண்டி ஏரியின் உபரி நீர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ஏரிக்கு நீர்பிடிப்புப் பகுதிகளில் இருந்தும் நீர் பெறப்படுகிறது.

எதிர்வரும் வடகிழக்குப் பருவமழையின் மூலம் அனைத்து ஏரிகளும் நிரம்ப வாய்ப்புள்ளது. மேலும் ஜனவரி மாதம் முதல் கிருஷ்ணா நதிநீர் பங்களிப்பு திட்டம் வாயிலாக 4 டி.எம்.சி தண்ணீர் சென்னை குடிநீர் வாரியத்திற்கு கிடைப்பதற்கான உரிய நடவடிக்கைகள் முன்னரே நீர் வளத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு அடுத்த ஒருவருட காலத்திற்கு இருப்பில் உள்ள குடிநீரைக் கொண்டு தொடர்ந்து எந்தவித தங்கு தடையின்றி சீரான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க இயலும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News