தமிழ்நாடு
கோவை வெள்ளிங்கிரி மலைப்பாதையில் ஏறிச்சென்ற அமைச்சர் சேகர் பாபு.

உயரமான, செங்குத்தாக காணப்படும் வெள்ளிங்கிரி மலை ஏறிய அமைச்சர் சேகர்பாபு

Published On 2022-05-22 09:09 GMT   |   Update On 2022-05-22 09:09 GMT
அமைச்சர் சேகர்பாபு மலையேறும்போது, செல்லும் வழியில் உள்ள மலைப்பாதைகள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பதையும் பார்வையிட்டவாறே மலையேறினார்.
வடவள்ளி:

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பூண்டி வெள்ளிங்கிரி மலை உள்ளது. இங்கு சுயம்பு வடிவிலான சிவபெருமான் அருள்பாலித்து வருகிறார். சாமியை தரிசிக்க தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

குறிப்பாக ஜனவரி முதல் வாரத்திலிருந்து மே இறுதி வாரம் வரை பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலில் மலைப்பாதை அமைக்கும் பணிக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைச்சர் சேகர்பாபு இன்று காலை பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு வந்தார்.

அவர் அடிவாரப் பகுதியில் உள்ள வெள்ளிங்கிரி ஆண்டவர், மனோன்மணி அம்மை ஆகியோரை வணங்கி விட்டு, கோவிலில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கோவிலின் தேவைகள் குறித்தும், பக்தர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும், தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்டு வரும் அடிப்படை தேவைகள் குறித்தும், அன்னதான கூடத்தில் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் பக்தர்கள் தங்கும் கூடத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள பிரத்யேக வசதிகள் போன்றவை குறித்தும் பக்தர்கள் மற்றும் அலுவலரிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் வெள்ளிங்கிரி மலையேறினார்.

இந்த மலையானது மிகவும் உயரமானது. செங்குத்தாக காணப்படும் மலையாகும். 7 மலைகளை கடந்து சென்றே பக்தர்கள் சிவபெருமானை தரிசித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று அமைச்சர் சேகர்பாபுவும் 7 மலைகளை கடந்து சென்று சிவபெருமானை தரிசிக்க உள்ளார்.

மலையேறும்போது, செல்லும் வழியில் உள்ள மலைப்பாதைகள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பதையும் பார்வையிட்டவாறே மலையேறினார். அப்போது அவருடன் வனத்துறை ஊழியர்களும் பாதுகாப்புக்கு சென்றனர்.

ஆய்வின்போது, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையர் செந்தில் வேலவன் துணை ஆணையர் ஆனந்தன், கோவை மண்டல உதவி ஆணையர் கருணாநிதி, பூண்டி கோவில் செயலாளர் சந்திரமதி, மற்றும் பேரூர் வட்டார டி. எஸ்.பி., திருமால் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.


இதையும் படியுங்கள்...மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றும் செவிலியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு- அமைச்சர் தகவல்
Tags:    

Similar News