தமிழ்நாடு
உகாண்டா நாட்டு பெண்ணிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகள்

ரூ.4 கோடி மதிப்பிலான போதை பொருளை வயிற்றில் மறைத்து எடுத்து வந்த உகாண்டா நாட்டு பெண்- பரபரப்பு தகவல்கள்

Published On 2022-05-10 07:47 GMT   |   Update On 2022-05-10 07:47 GMT
உகாண்டா நாட்டு பெண் கடத்தி வந்தது மெத்ராபெத்தமின் என்ற போதைப்பொருள் என்பதும், அதன் சர்வதேச மதிப்பு ரூ.4 கோடி என்பதும் தெரிய வந்துள்ளது.
கோவை:

கோவை ஷார்ஜா இடையே ஏர் அரேபியா விமானம் இயக்கப்படுகிறது. கடந்த 6ந் தேதி ஷார்ஜா விமானத்தில் கோவைக்கு வரும் பெண் ஒருவர் போதைப்பொருளை கடத்தி வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.

விமானம் கோவைக்கு வந்ததும் பயணிகளை அதிகாரிகள் கண்காணித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது உகாண்டா நாட்டிலிருந்து வந்த பெண் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனையடுத்து அதிகாரிகள் அவரை தனியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கேப்சூல் வடிவில் போதைப்பொருளை வயிற்றுக்குள் விழுங்கி கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அதிகாரிகள் அவர் கடத்தி வந்த பொருளை வெளியே எடுப்பதற்காகவும், என்ன பொருளை கடத்தி வந்தார் என்பதை தெரிந்து கொள்ளவும் அந்த பெண்ணை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் உகாண்டா நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரூ என்பவரது மனைவி சேன்ட்ரா நன்டசா (வயது33) என்பது தெரியவந்தது. சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவரது வயிற்றிலிருந்து 2 நாட்களில் 81 மாத்திரைகள் வெளியே வந்தது.

அதனை அதிகாரிகள் என்ன போதைப்பொருள் என்பதை கண்டறிய ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். ஆய்வின் முடிவில் உகாண்டா நாட்டு பெண் கடத்தி வந்தது மெத்ராபெத்தமின் என்ற போதைப் பொருள் என்பது தெரியவந்தது.

இந்த போதைப் பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.4 கோடி என்பதும் தெரியவந்தது. இந்தப் பெண்ணை அதிகாரிகள் இன்று தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் ஜெயில் அடைப்பதற்கான பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.




Tags:    

Similar News