தமிழ்நாடு
பத்மராஜன்

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட மனுதாக்கல்: 227-வது முறையாக களம் காணும் தேர்தல் மன்னன் பத்மராஜன்

Update: 2022-01-29 09:19 GMT
வருகிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் 227-வது முறையாக தேர்தல் களத்தை பத்மராஜன் சந்திக்கிறார்.
மேட்டூர்:

சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் பத்மராஜன் (வயது 62). இவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதற்காக கடந்த 1988-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறார். கூட்டுறவு சங்க தேர்தல் முதல் ஜனாதிபதி தேர்தல் வரை அனைத்து தேர்தல்களிலும் இவர் வேட்பு மனு தாக்கல் செய்து வருகிறார்.

தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் அவர்களை எதிர்த்து வேட்பு மனுதாக்கல் செய்து பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். சுயேச்சைகள் பொதுத் தேர்தல்களில் போட்டியிடுவதை கட்டுப்படுத்த டெபாசிட் தொகையை அதிகப்படுத்தியபோதும் மனம் தளராமல் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இவரது சாதனைகள் லிம்கா புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் வருகிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் 227-வது முறையாக தேர்தல் களத்தை சந்திக்கிறார்.

சேலம் மாவட்டம் வீரக்கல் புதூர் பேரூராட்சியில் 2-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான ஜேம்ஸ் என்பவரிடம் இவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். பத்மராஜனுக்கு அவரது மகன் ஸ்ரீஜேஸ் முன்மொழிந்தார். இதேபோல் மேட்டூர் மற்றும் தாரமங்கலம் நகராட்சிகளிலும் போட்டியிடவும் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக பத்மராஜன் தெரிவித்துள்ளார்.

இவர் பழைய லாரி மற்றும் பஸ் டயர்களை புதுப்பிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் நடக்கும் பல்வேறு தேர்தல்களில் அவர் போட்டியிட்டுள்ள சூழலில், இதுவரை எங்குமே அவர் வெற்றி பெற்றதில்லை. கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தலில் மேட்டூர் தொகுதியில் போட்டியிட்டு 6,273 வாக்குகள் பெற்றது தான் இதுவரை அவர் வாங்கிய வாக்குகளில் அதிகமாகும்.Tags:    

Similar News