தமிழ்நாடு
சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ள வனத்துறையினர்

அவிநாசி அருகே சோளக்காட்டுக்குள் பதுங்கிய சிறுத்தை தப்பியது - கிராமமக்கள் பீதி

Update: 2022-01-25 10:02 GMT
தகவல் அறிந்ததும் சேவூர் போலீசார், திருப்பூர் கோட்ட வனச்சரக ஊழியர்கள், வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அவினாசி:

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள சேவூர் பாப்பாங்குளத்தை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 63). இவர் தனது தோட்டத்தில் கடந்த 2 நாட்களாக சோளத்தட்டு அறுவடை பணிகளை மேற்கொண்டு வந்தார். அவருடன் விவசாய கூலி தொழிலாளி மாறன் (66) என்பவரும் அப்பணியில் ஈடுபட்டு வந்தார். 

நேற்று அதிகாலை இருவரும் தோட்டத்தில் அறுவடை பணிகளை மேற்கொண்டிருந்தபோது திடீரென அங்கு புகுந்த சிறுத்தை மாறனை தாக்கியது. இதில் அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த வரதராஜனையும் சிறுத்தை தாக்கியது. இருவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வரவே சிறுத்தை அங்கிருந்து தப்பியோடியது. 

இது குறித்த தகவல் அறிந்ததும் சேவூர் போலீசார், திருப்பூர் கோட்ட வனச்சரக ஊழியர்கள், வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்த  2பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே தப்பியோடிய சிறுத்தை சோளக்காட்டுக்குள் சென்று பதுங்கி கொண்டது. இதையடுத்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் களமிறங்கினர். திருப்பூர் மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி தலைமையிலான வனத்துறை பணியாளர்கள் சோளக்காட்டு பகுதியில் டிரோன் காமிராவை பறக்கவிட்டு சிறுத்தை எங்கும் பதுங்கியுள்ளதா? என்று ஆய்வு நடத்தினர். 


சோளக்காட்டு பகுதியில் சிறுத்தையை பிடிக்க வைக்கப்பட்டுள்ள கூண்டு.


மேலும் அமராவதி வனச்சரகத்தை சேர்ந்த வேட்டைத்தடுப்பு காவலர் மணிகண்டன் மற்றும் சிலர் கவச உடை அணிந்து சிறுத்தையை தேடி சோளக்காட்டுக்குள் சென்றனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த சிறுத்தை வேட்டை தடுப்பு காவலர் மணிகண்டன் மீது பாய்ந்து அவரை கடிக்க முயன்றது. இதில் அவர் லாவகமாக சிறுத்தையின் பிடியில் இருந்து தப்பினார். 

இதைத்தொடர்ந்து சிறுத்தை வேறு எங்கும் தப்பி செல்லாமல் இருக்க சோளக்காட்டு பகுதியை சுற்றி வலைகள் அமைக்கப்பட்டது. இரவு நேரங்களில் இயங்கக்கூடிய தானியங்கி கேமரா அப்பகுதியில் உள்ள மரங்கள் உள்பட 12 இடங்களில் பொருத்தப்பட்டது.  

சோளக்காட்டு பகுதியை சுற்றி 3 இடங் களில் கூண்டுகளும் வைக்கப்பட்டது. இப்பணிகள் நேற்று மதியம் முதல் மாலை வரை நடைபெற்றது. பின்னர் இரவு நேரம் ஆகிவிட்டதால் சிறுத்தையை பிடிக்கும் பணியில் சிரமம் ஏற்பட்டது. 

இதையடுத்து கேமராக்களில் சிறுத்தை நடமாட்டம் தென்படுகிறதா? என்று வனக்குழுவினர் இரவு முதல் இன்று காலை வரை கண்காணிப்பில் ஈடுபட்டனர். 3 கூண்டுகளில் மாமிசத்தை போட்டு வைத்திருந்தனர். 

ஆனால் இன்று காலை சிறுத்தை கூண்டுகளில் சிக்கவில்லை. இருப்பினும் சிறுத்தை சோளக்காட்டு பகுதிக்குள் தொடர்ந்து பதுங்கியிருப்பதை வனத்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர். 

இதைத்தொடர்ந்து 2-வது நாளாக இன்று காலை முதல் சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

திருப்பூர்,கோவை மாவட்டத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட வனத்துறை பணியாளர்கள் அங்கு முகாமிட்டுள்ளனர். பொதுமக்கள் அங்கு கூடுவதை தவிர்க்க போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்பு படை வீரர்களும் சம்பவ இடத்திற்கு வர வழைக்கப்பட்டுள்ளனர். 

சிறுத்தை கூண்டுக்குள் சிக்காததால் அதனை மயக்க ஊசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இன்று காலை கால்நடை டாக்டர் மற்றும் வனத்துறை பணியாளர்கள் அடங்கிய குழுவினர் கிரேன் மூலம் சோளக்காட்டு பகுதிக்குள் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

சிறுத்தை தென்பட்டால் உடனே மயக்க ஊசி செலுத்தி பிடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இந்த நிலையில் சோளக்காட்டுக்குள் பதுங்கிய சிறுத்தை அங்கிருந்து தப்பியது. 

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட துணை வனப் பாதுகாவலர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:

திருப்பூர் பாப்பாங்குளம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் வந்த நிலையில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியை துரிதப்படுத்தினர். வன பாதுகாப்பு அலுவலரை சிறுத்தை தாக்கியதை அடுத்து சிறுத்தை இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து கண்காணிப்பு பணி நடைபெற்று வந்த நிலையில் இன்று காலை சிறுத்தை வனத்துறையினரின் கண்காணிப்பில் இருந்து வேறு பகுதிக்கு நகர்ந்து சென்றுள்ளது.

இருப்பினும் பாப்பாங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் வனப்பாதுகாப்புத் துறையினர் 80 பேர் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News