தமிழ்நாடு
கூண்டில் சிக்கிய சிறுத்தை

கோவையில் 5 நாட்களுக்கு பிறகு குடோனில் பதுங்கிய சிறுத்தை கூண்டில் சிக்கியது

Published On 2022-01-22 04:16 GMT   |   Update On 2022-01-22 06:20 GMT
கடந்த சில மாதங்களாக குனியமுத்தூர், சுகுணாபுரம், கோவைப்புதூர், மதுக்கரை உள்ளிட்ட பகுதி பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டதால் அப்பகுதி மக்கள் மிகவும் நிம்மதி அடைந்துள்ளனர்.
குனியமுத்தூர்:

கோவை குனியமுத்தூர், சுகுணாபுரம், கோவைப்புதூர், மதுக்கரை பகுதிகளில் சுற்றி திரிந்த சிறுத்தை கடந்த 17-ந் தேதி பி.கே.புதூர் பகுதியில் உள்ள தனியார் குடோனுக்குள் புகுந்தது.

வனத்துறையினர் விரைந்து வந்து சிறுத்தையை பிடிப்பதற்காக கூண்டுகள் மற்றும் வலையை விரித்து வைத்து காத்திருந்தனர். ஆனால் சிறுத்தை சிக்காமல் போக்கு காட்டியே வந்தது.

குடோனுக்குள் 6 கேமராக்களை பொருத்தி சிறுத்தையை கண்காணித்தனர். குடோனுக்குள் இருக்கும் சிறுத்தை தான் இருந்த இடத்தை விட்டு ஒவ்வொரு அறையாக சுற்றுவதும், கூண்டுகளின் அருகே வந்து விட்டு புத்திசாலித்தனமாக திரும்பி செல்வதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறது.

நேற்று 5-வது நாளாக சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்தனர். எப்படியும் இன்று கூண்டுக்குள் சிறுத்தை வரும் என பொறுமையுடன் காத்திருந்தனர்.

வனத்துறையினர் எதிர்பார்த்தது போலவே நள்ளிரவில் சிறுத்தை குடோனுக்குள் கூண்டில் வைக்கப்பட்டிருந்த இறைச்சியை தின்பதற்காக உள்ளே வந்தது. கூண்டுக்குள் வந்த சற்று நேரத்திலேயே வனத்துறையினர் கயிற்றால் கூண்டு கதவை இழுத்து மூடினார்கள். இதனால் சிறுத்தை சிக்கி கொண்டது.

சிறுத்தை சிக்கிய தகவல் அறிந்ததும் வனத்துறையினர் குடோனுக்குள் சென்று பார்த்தனர். அப்போது சிறுத்தை உறுமலுடன் கூண்டுக்குள் சிறிது நேரம் அங்கும், மிங்கும் ஒடியது. பின்னர் அமைதியாகி விட்டது. இதையடுத்து வனத்துறையினர் லாரி வரவழைத்து கூண்டில் சிக்கிய சிறுத்தையை மேட்டுப்பாளையத்தில் உள்ள மரக்கிடங்கு பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுத்தைக்கு இறைச்சி மற்றும் தண்ணீர் கொடுக்கப்பட்டது. சிறுத்தை இறைச்சி மற்றும் தண்ணீர் சாப்பிட்டது. மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

இதுகுறித்து வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் கூறியதாவது:

5 நாட்களாக சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தோம். நேற்று நள்ளிரவு நேரத்தில் சிறுத்தை கூண்டில் சிக்கிக்கொண்டது. உடனடியாக சிறுத்தை மேட்டுப்பாளையம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு கால்நடை மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு சிறுத்தையின் உடல்நலம் பரிசோதிக்கப்பட்டது. அதில் 5 நாட்கள் சாப்பிடாவிட்டாலும் சிறுத்தை ஆரோக்கியத்துடனே இருப்பதாக டாக்டர்கள் கூறினர்.

அதன்படி நாங்கள் சிறுத்தையை எந்த வனப்பகுதியில் விடலாம் என யோசித்தோம். தற்போது சிறுத்தையை பொள்ளாச்சி டாப்சிலிப் வனப்பகுதியில் விட முடிவு செய்து அதற்கான பணியில் இறங்கியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே இன்று காலை வனத்துறையினர் சிறுத்தையை கூண்டில் வைத்து அடைத்து லாரியில் ஏற்றி கொண்டு பொள்ளாச்சி டாப்சிலிப் வனப்பகுதிக்கு சென்றனர். அங்கு அடர்ந்த வனப்பகுதியில் சிறுத்தை விடப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக குனியமுத்தூர், சுகுணாபுரம், கோவைப்புதூர், மதுக்கரை உள்ளிட்ட பகுதி பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டதால் அப்பகுதி மக்கள் மிகவும் நிம்மதி அடைந்துள்ளனர்.



Tags:    

Similar News