தமிழ்நாடு
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் மற்றும் பக்தர்கள்

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் முன்பு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ‘திடீர்’ உண்ணாவிரதம்

Published On 2022-01-17 08:01 GMT   |   Update On 2022-01-17 08:01 GMT
உவரி சுயம்புலிங்க கோவில் தேரோட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் இன்று கோவில் நுழைவு வாயில் முன்பு திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திசையன்விளை:

நெல்லை மாவட்டத்தில் உள்ள பழமையான சிவாலயங்களில் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலும் ஒன்றாகும்.

இந்த கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வழக்கமாக திருவிழாவின் 9-ம் நாளன்று தேரோட்டம் நடைபெறும்.

அதன்படி 9-ம் நாளான நாளை (செவ்வாய்க்கிழமை) தேரோட்டம் நடைபெற வேண்டும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் காரணமாக தேரோட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் கோவில் தேரோட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், எம்.ஆர்.காந்தி ஆகியோர் தலைமையில் இன்று கோவில் நுழைவு வாயில் முன்பு பா.ஜனதாவினர் மற்றும் பக்தர்கள் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பா.ஜனதா நெல்லை மாவட்ட பொதுச்செயலாளர் தமிழ்செல்வன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் சிவமுருகஆதித்தன், கோவில் தேர்திருப்பணிக் குழு செயலாளர் தர்மலிங்க உடையார் மற்றும் பக்தர்கள் என சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



Tags:    

Similar News