தமிழ்நாடு
மதுரை ஐகோர்ட்

நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க எடுத்த நடவடிக்கை என்ன?- அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி

Published On 2022-01-04 09:35 GMT   |   Update On 2022-01-04 09:35 GMT
தமிழகத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை:

தமிழகத்தில் போதுமான அளவு நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும் என கே.கே.ரமேஷ் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த விசயத்தில் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தனர்.

இந்த நிலையில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கே.கே.ரமேஷ் மதுரை ஐகோர்ட்டில் முறையீடு செய்தார்.

இந்த முறையீட்டு மனுவை நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு இன்று விசாரித்தது. அப்போது நீதிபதிகள், ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறுகிறீர்கள். ஆனால் அதே பிரச்சினை, அதே பாதிப்பு மீண்டும்... மீண்டும்... எழுவது ஏன்? என கேள்வி எழுப்பினர்.

மேலும் விவசாயிகள் தான் நெல்லை கொள்முதல் செய்ய கொண்டு வருகிறார்களா? அல்லது இடைத்தரகர்கள் கொண்டு வருகிறார்களா? என்பதே பல நேரங்களில் தெரிவதில்லை.

அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என கூறவில்லை. ஆனால் இன்னமும் விவாசாயிகள் பாதிக்கப்படுகிறார்களே? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

நெல் கொள்முதல் தொடர்பான கண்காணிப்பு குழுவில் விதிப்படி 2 விவசாயிகள் இடம்பெற வேண்டுமே? அது போல் 2 விவசாயிகள் இடம் பெற்றுள்ளனரா? எனவும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு தரப்பில் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, நிலுவையில் உள்ள வழக்கை அடுத்த வாரத்திற்கு பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Tags:    

Similar News