தமிழ்நாடு
மணிமுத்தாறு அணை

ஒரே ஆண்டில் 3-வது முறையாக நிரம்பிய மணிமுத்தாறு அணை

Published On 2021-12-21 05:16 GMT   |   Update On 2021-12-21 05:16 GMT
பாபநாசம் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 682 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 705 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
நெல்லை:

தமிழகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் இயல்பை விட அதிக அளவு பெய்துள்ளது.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்திலும் இந்த ஆண்டு வழக்கத்தை விட கூடுதல் மழை பெய்ததால் அனைத்து அணைகளும் நிரம்பின. விவசாய பணிகளும் அனைத்து பகுதிகளிலும் மும்முரமாக நடந்து வருகிறது.

கடந்த ஒரு வாரமாக மழை இல்லாவிட்டாலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருந்து அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது.

வழக்கமாக மழை இல்லாவிட்டால் மணிமுத்தாறு அணைக்கு மிக குறைந்த அளவே தண்ணீர் வரும். ஆனால் கடந்த சில நாட்களாக மணிமுத்தாறு அணைக்கு கூடுதல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

கடந்த 18-ந்தேதி அணைக்கு வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் வந்தது. இது சற்று குறைந்து இன்று காலை வினாடிக்கு 235 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணை நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு 114 அடி இருந்த மணிமுத்தாறு அணை நீர்மட்டம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. இதைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக மணிமுத்தாறு அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி 117.60 அடியாக உயர்ந்து உள்ளது.

ஏற்கனவே இந்த ஆண்டு ஜனவரி மாதம் மழை காரணமாக மணிமுத்தாறு அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்தது. இந்த நிலையில் கூடுதல் வடகிழக்கு பருவமழை பெய்ததால் கடந்த 20 நாட்களுக்கு முன்பு 2-வது முறையாக மணி முத்தாறு அணை நிரம்பியது.

இதைத்தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது மீண்டும் மணிமுத்தாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் 3-வது முறையாக நேற்று மீண்டும் நிரம்பி உள்ளது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே பாசனத்திற்கு திறந்து விடப்படுகிறது.

பாபநாசம் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 682 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 705 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

பாபநாசம் அணையும் தொடர்ந்து நிரம்பும் தருவாயில் உள்ளது. அணை பாதுகாப்பு கருதி நீர்மட்டம் 140.10 அடியிலேயே நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

சேர்வாறு அணை நீர்மட்டம் 151.15 அடியாக உள்ளது. கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார், நம்பியாறு, வடக்கு பச்சையாறு, கொடுமுடியாறு ஆகிய அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு சற்று குறைந்துள்ளது.

Tags:    

Similar News