தமிழ்நாடு
இறந்துபோன சிறுவன்

பட்டினியால் இறந்த சிறுவன் வெளிமாநிலத்தை சேர்ந்தவனா?- கண்காணிப்பு கேமரா மூலம் விசாரணை

Published On 2021-12-20 05:04 GMT   |   Update On 2021-12-20 05:04 GMT
விழுப்புரத்தில் தள்ளுவண்டியில் உயிரிழந்து கிடந்த 5 வயது சிறுவன் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவன் என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:

விழுப்புரத்தில் சென்னை நெடுஞ்சாலையில் மேல் தெருவில் ஒரு ஷோரூம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தள்ளு வண்டியில் சுமார் 5 வயது மதிக்கத்தக்க சிறுவன் கடந்த 15-ந்தேதி காலை பிணமாக கிடந்தான்.

தகவல் அறிந்த விழுப்புரம் மேற்கு போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் அந்த சிறுவன் கொலை செய்யப்பட்டானா? என்பது குறித்து விசாரணையை போலீசார் முடுக்கினர். ஆனால் அந்த சிறுவன் யார்? எந்த ஊரை சேர்ந்தவன் என்ற விபரம் தெரியவில்லை.

இதற்கிடையில் சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் உணவு இல்லாமல் பட்டினியால் அவன் இறந்திருப்பது தெரியவந்தது.

சிறுவனின் ஆடைகளை பார்க்கும்போது ஏழை குடும்பத்தை சேர்ந்தவன் போல தெரியவில்லை. பசியால் அலைந்து உள்ளதால் ஆடை அழுக்காகி உள்ளது. எனவே இந்த சிறுவன் யார்? என்பது குறித்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கடந்த சில மாதங்களாக வெளிமாநிலங்களை சேர்ந்த சிறுவர்கள் ஏராளமானோர் பிழைப்புக்காக விழுப்புரத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்த சிறுவர்களை கடத்தல் கும்பல் புரோக்கர்கள் மூலம் விழுப்புரத்துக்கு கொண்டு வருகின்றனர்.

எனவே வெளி மாநிலத்தை சேர்ந்த கடத்தல் கும்பல் இந்த சிறுவனை தனிமைப்படுத்தி உணவு கொடுக்காமல் வைத்திருந்து இறந்தபின்பு தள்ளுவண்டியில் போட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதோடு சிறுவனின் போட்டோவை ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநில போலீசாருக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News