செய்திகள்
செல்லூர் ராஜூ

தி.மு.க.வினர் மக்கள் பணியில் தீவிரம் காட்ட வேண்டும்- செல்லூர் ராஜூ

Published On 2021-11-14 09:01 GMT   |   Update On 2021-11-14 09:01 GMT
எதற்கெடுத்தாலும் கடந்த அ.தி.மு.க. ஆட்சி மற்றும் முன்னாள் அமைச்சர்களை குறை சொல்வதை விட்டு விட்டு தி.மு.க.வினர் மக்கள் பணியில் தீவிரம் காட்ட வேண்டும் என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை:

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பழங்காநத்தம் பகுதியில் உள்ள மாடக்குளம் கண்மாய் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. இன்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது-

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மதுரையில் சுற்றியுள்ள அனைத்து கண்மாய்கள், குளங்கள் தூர்வாரப்பட்டன. இதன் காரணமாக தற்போது ஒவ்வொரு நீர்நிலைகளிலும் 80 சதவீதம் வரை தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது.

ரூ.18 கோடி மதிப்பீட்டில் வைகை ஆற்றின் குறுக்கே கொடிமங்கலத்தில் தடுப்பணை கட்டப்பட்டது. இதன் காரணமாக மதுரை நகரின் நீர் பற்றாக்குறையை போக்கும் முக்கிய கண்மாயான மாடக்குளம் கண்மாயில் அதிகளவில் தண்ணீர் வருகிறது. கண்மாயில் 80 சதவீத தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தூர்வாரப்பட்டதன் காரணமாக இங்கு கூடுதல் தண்ணீர் நிரப்ப வழிவகை ஏற்பட்டுள்ளது.

கூட்டுறவுத்துறையை பொருத்தவரை எந்த ஆட்சியாக இருந்தாலும் தவறு நடந்தால் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவுத்துறை சின்னா பின்னமாக்கப்பட்டது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்திலுள்ள 4449 கூட்டுறவு சங்கங்களும் முறைப்படுத்தப்பட்டு சிறப்பாக இயங்கின.

பயிர் கடன் தள்ளுபடி, நகை கடன் தள்ளுபடி ஆகியவற்றில் முறைகேடுகள் நடந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கலாம். அதற்காக பொத்தாம் பொதுவாக அ.தி.மு.க. ஆட்சி மீது குற்றம் சாட்டக்கூடாது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக பணிகள் நடைபெற்று வருகிறது. இதிலும் முறைகேடுகள், ஊழல் நடந்ததாக தி.மு.க.வினர் பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டுகிறார்கள். இது ஏற்கத்தக்கதல்ல.

கடந்த 2 மாதத்திற்கு முன்பே தி.மு.க. அரசு வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆய்வுகளை நடத்தி இருக்க வேண்டும்.

எதற்கெடுத்தாலும் கடந்த அ.தி.மு.க. ஆட்சி மற்றும் முன்னாள் அமைச்சர்களை குறை சொல்வதை விட்டு விட்டு தி.மு.க.வினர் மக்கள் பணியில் தீவிரம் காட்ட வேண்டும். அதுதான் ஒரு அரசுக்கு அழகாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News