search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்லூர் ராஜூ"

    • அ.தி.மு.க. அழிந்து போகும் என்று பேசி வரும் அண்ணாமலைக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
    • தேன்கூட்டில் கையை வைத்துவிட்டு நிம்மதியாக இருக்க முடியாது.

    மதுரை:

    மதுரையில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் பரவை, ஊர் மெச்சிகுளம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஒரு உயரமான சுவரில் ஆட்டுக்குட்டி ஒன்று நின்று கொண்டு அவ்வழியாகச் சென்ற சிங்கத்தை வம்புக்கு இழுத்தது. ஏய் சிங்கம் நில், எனக்கு தழையை பறித்து போடு என சவடால் அடித்தது. சுவர் என்பது ஆளுங் கட்சி. மத்தியில் தனது கட்சி தான் ஆட்சியில் இருக்கிறது என்ற திமிரில் அண்ணாமலை வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி வருகிறார்.

    நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அண்ணாமலை. அவர் மட்டுமல்ல, அவரது அப்பனே வந்தாலும் அ.தி.மு.க.வை அளிக்க முடியாது. அரசியலில் அவர் கற்றுக் குட்டி தான், திராவிட இயக்கங்களின் வரலாறு தெரியாமல் பேசி வருகிறார் அண்ணாமலை. அவர் படித்து பாஸ் செய்தாரா, அல்லது பிட்டு அடித்து பாஸ் செய்தாரா என சந்தேகமாக உள்ளது.


    அ.தி.மு.க. அழிந்து போகும் என்று பேசி வரும் அண்ணாமலைக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். திராவிட இயக்கம் வளர வேண்டும் என உழைத்த தலைவர்களை அண்ணாமலை இழிவாக பேசி வருகிறார். அவர்களைப் பற்றி பேசுவதற்கு அண்ணாமலைக்கு என்ன தகுதி உள்ளது . உயர்ந்த தலைவர்களை இழிவாகப் பேசி வரும் அவரது நாக்கை வெட்டணுமா, வேண்டாமா? பத்தாண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க. அரசு தமிழகத்திற்கு என்ன செய்தது.

    பா.ஜ.க.வில் முழுவதும் திருடர்கள் கூட்டம் நிரம்பியுள்ளது. திருட்டுக் கூட்டம் அனைத்தும் பா.ஜ.க.வில் இணைந்துள்ளது. அண்ணாமலை வந்த பிறகு தான் இதுபோன்ற நபர்கள் பா.ஜ.க.வில் அதிகமாக சேர்ந்துள்ளனர். அ.தி.மு.க. அழிந்து போகும் என்று பேசிவரும் அண்ணாமலை தான் தேர்தலுக்குப் பிறகு அழிந்து போவார். அரசியலில் இருந்து அவர் அப்புறப்படுத்தப்படுவார். முகவரி இல்லாமல் ஆகிவிடுவார்.

    தேன்கூட்டில் கையை வைத்துவிட்டு நிம்மதியாக இருக்க முடியாது. நிச்சயம் அதற்கான பலனை அனுபவிப்பார். ஒரு கவுன்சிலர் பதவிக்கு கூட வெற்றி பெற இயலாமல் பணத்தை வாரி இறைத்த போதும் அண்ணாமலைக்கும், பா.ஜ.க.வுக்கும் யாரும் ஓட்டு போட தயாராக இல்லை. அ.தி.மு.க. தலைவர்களைப் பற்றியும், அ.தி.மு.க.வை பற்றியும் பேசுவதற்கு அண்ணாமலைக்கு அருகதையே கிடையாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கல்யாணத்தில் மாப்பிள்ளை யார் என்பது தான் முக்கியமான விஷயம்.
    • தினகரன் எப்போதில் இருந்து ஜோசியர் ஆனார் என தெரியவில்லை என்றார்.

    மதுரை:

    மதுரையில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு கேட்டு கத்தோலிக்க பேராயர் அந்தோணி பாப்புசாமியை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்குமாறு பேராயரை சந்தித்தேன். அப்போது அவர் மத்திய பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியது சரியான முடிவு என தெரிவித்தார். மேலும் இனிவரும் காலங்களிலும் அ.தி.மு.க. இதே நிலையை கடைபிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

    தமிழகத்தில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் அடிக்கடி பிரசாரத்திற்கு தமிழகம் வருகிறார்கள். தேர்தல் என்றால் அரசியல் தலைவர்கள் வரத்தான் செய்வார்கள். கல்யாணத்திற்கு உறவினர்கள், நண்பர்கள் வருவதுபோல் தேர்தலுக்கு தலைவர்கள் வருகிறார்கள்.

    ஆனால் கல்யாணத்தில் மாப்பிள்ளை யார் என்பது தான் முக்கியமான விஷயம். அந்த வகையில் இந்த தேர்தலில் அ.தி.மு.க. தான் மாப்பிள்ளை என நகைச்சுவையாக கூறினார்.

    இதையடுத்து நிருபர்கள் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் படுதோல்வி அடைந்துள்ளது. இந்த தேர்தலிலும் தோல்வி அடையும் என தினகரன் கூறியுள்ளாரே? என கேட்டனர். அதற்கு பதில் அளித்த செல்லூர் ராஜூ, தினகரன் எப்போதில் இருந்து ஜோசியர் ஆனார் என தெரியவில்லை என்றார்.

    • தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கச்சத்தீவு பிரச்சனையில் நடத்துகிற கபட நாடகம், வேஷங்களை தமிழக மீனவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
    • மீனவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இந்த தேர்தலில் அ.தி.மு.க. பக்கம் திரும்பி உள்ளனர்.

    மதுரை:

    கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. மற்றும் தி.மு.க. ஒருவரையொருவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் நிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 1974-ம் ஆண்டு கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அப்போது தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த கருணாநிதி இந்த விவகாரத்தில் வாய்மூடி மவுனியாக இருந்தார். எந்த போராட்டமும் நடத்தவில்லை, இது வரலாறு.

    ஆனால் இன்றைக்கு பா.ஜ.க. கச்சத்தீவு பிரச்சனையை கையில் எடுத்துள்ளது. இதற்கு தி.மு.க.வும் பதிலளித்து பேசி வருகிறது. கச்சத்தீவு விவகாரத்தை பொறுத்தவரை தி.மு.க. பொய் பேசுகிறது என்றால் பா.ஜனதா பயங்கர பொய்யை பேசுகிறது. இது அவர்களது தேர்தல் ஸ்டண்டாகும்.

    ஆனால் தமிழக மீனவர்கள் பிரச்சனையில் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. எனவே மீனவர்கள் இந்த தேர்தலில் அ.தி.மு.க. பக்கம் திரும்பி உள்ளனர். எனவே தான் பா.ஜனதாவும், தி.மு.க.வும் கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்து கபடநாடகம் நடத்துகிறது.


    கடந்த 2006, 2008, 2009 ஆகிய ஆண்டுகளில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதா, கச்சத்தீவு விவகாரத்தில் தமிழக மீனவர்களின் உரிமை பாதுகாக்க கூடிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பலமுறை கடிதங்கள் மூலம் கோரிக்கை வைத்தார்.

    கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர்களிலும் இந்த விவகாரம் குறித்து அம்மா பேசினார். அப்போது பதில் அளித்த கருணாநிதி, தமிழக மீனவர்கள் பேராசைப்பட்டு இலங்கை கடற்பகுதிக்குள் மீன்பிடிக்க செல்வதால்தான் இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தும் நிலை ஏற்படுவதாக தெரிவித்தார். இந்த கருத்தை அன்றைக்கு அம்மா கடுமையாக எதிர்த்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

    மேலும் எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.க. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து கச்சத்தீவு விவகாரத்தில் சட்டப் போராட்டங்கள் நடத்தியது. இதை தி.மு.க., பாரதிய ஜனதா தலைவர்கள் மறந்தாலும் மீனவர்கள் மறக்கமாட்டார்கள். இன்றைக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கச்சத்தீவு பற்றி எதுவுமே தெரியாமல் யாரோ எழுதிக் கொடுத்ததை படிக்கிறார்.

    தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கச்சத்தீவு பிரச்சனையில் நடத்துகிற கபட நாடகம், வேஷங்களை தமிழக மீனவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இது ஒரு தேர்தல் ஸ்டண்டாகவே அவர்கள் பார்க்கிறார்கள். எனவே மீனவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இந்த தேர்தலில் அ.தி.மு.க. பக்கம் திரும்பி உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.திமு.க. வேட்பாளர் சரவணனின் அறிமுகம் மற்றும் பிரசாரம் கூட்டம் நடைபெற்றது.
    • செல்லூர் ராஜூவின் பேச்சை கேட்டு கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.

    மதுரை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெறும் தேர்தலுக்காக பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் பிரசாரத்துக்கு இன்னும் 21 நாட்களே உள்ள நிலையில் தலைவர்கள் கட்சி, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகின்றனர்.

    அந்த வகையில், மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.திமு.க. வேட்பாளர் சரவணனின் அறிமுகம் மற்றும் பிரசாரம் கூட்டம் செல்லூரில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, "நான் பேசும்போது யாராவது பாதியில் எழுந்து போனால் ரத்தம் கக்கி சாவீங்க" என்று கூறியதால் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.

    மேலும் செல்லூர் ராஜூ கூறியதாவது:- கூட்டத்தில் பேச்சை ஆரம்பிக்க போவதால் நீண்ட நேரம் அமர்ந்து உள்ளவர்கள் எழுந்து போவது என்றால் போகலாம். இங்க இருந்தா பேசக்கூடாது. இடையில் எழுந்திருக்க கூடாது. அப்படி இருக்கிறங்க உட்காருங்கள். அப்படி இல்லன்னா ரத்தம் கக்கி செத்துருவீங்க. நான் மந்திரம் போட்டு வந்துருக்க. நான் ஆலோசனை கூட்டத்தில் பேசும்போது யாராவது எழுந்திருச்சி போனா அவங்க வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி ரத்தம் கக்கி சாவாங்க...னு சொல்லிட்டு வந்துருக்கேன் என்று பேசினார்.

    செல்லூர் ராஜூவின் பேச்சை கேட்டு கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாஜக கூட்டணிக்கு போகிறவர்களை பற்றி எங்களுக்கு கவலையில்லை.
    • திமுக அரசும், பாஜக அரசும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

    மதுரை:

    மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * எங்களை பொறுத்தவரை மக்களுக்காக பணி, மக்கள் தான் எஜமானர்கள்.

    * மதவாத இயக்கத்தைவிட அதிமுக ஆபத்தான கட்சி என விமர்சனம் செய்துள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணனை கண்டிக்கிறேன்.

    * பாஜக கூட்டணிக்கு போகிறவர்களை பற்றி எங்களுக்கு கவலையில்லை.

    * தேர்தல் களத்தில் மக்கள்தான் எஜமானர்கள்... மக்களை தான் தேடி செல்ல வேண்டும்.

    * திமுக அரசும், பாஜக அரசும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

    * திமுக தேர்தல் அறிக்கை... இன்னும் எத்தனை காலம்தான் மக்களை ஏமாற்றுவார்களோ.

    * பிரதமர் மோடி சிலிண்டர் விலை குறைப்போம் என்றார் செய்தாரா?

    * சிலிண்டர் விலை குறைப்பு வாக்குறுதி திமுகவின் மற்றொரு முகம் என்று கூறினார்.

    • அரசியலில் அண்ணாமலை கத்துக்குட்டி.
    • பிரதமரின் கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட கூட்டம் தானாக சேர்ந்த கூட்டம் இல்லை.

    மதுரை:

    மதுரை கோச்சடையில் புதிய ரேசன் கடையை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க.வுக்கு நிலையான கொள்கை கிடையாது. நீட் தேர்வுக்கு ஆதரவாக கையெழுத்து போட்டது தி.மு.க.

    நீட் ரத்து ரகசியத்தை உதயநிதி இதுவரை சொல்லவில்லை. தி.மு.க. காலத்தில் தான் தமிழர்களின் உரிமைகள் பறிபோனது. தமிழ்நாட்டில் உள்ள ஒரே அரைவேக்காடு அண்ணாமலை தான்.

    மத்தியில் ஆளும் கட்சி என்ற மமதையில் அண்ணாமலை மறைந்த தலைவர்களை மதிக்காமல் அரைவேக்காடு தனமாக பேசுகிறார்.


    அரசியலில் அண்ணாமலை கத்துக்குட்டி. தேர்தல் வாக்கு எண்ணிக்கை பெட்டியை உடைக்கும் போது தான் பா.ஜ.க.வுக்கு மக்கள் என்ன ஆப்பு வைத்துள்ளார்கள் என்று தெரியும். அதன் பிறகு அண்ணாமலை இருப்பாரா? தொடர்வாரா? என்பது தெரியும்.

    கட்சி என்பது எப்படி இருக்க வேண்டும் என்றால் எல்லா சமூகத்ததையும், மதத்தினரையும் அரவணைத்து செல்ல வேண்டும். பாரதிய ஜனதா அப்படி கிடையாது. ஒரு மதத்தை முன்னிறுத்தி அரசியல் நடத்துகின்றது என்பது தான் மனவேதனை.

    பிரதமரின் கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட கூட்டம் தானாக சேர்ந்த கூட்டம் இல்லை. தேர்தலில் மக்கள் நன்றாக பதில் கொடுப்பார்கள். கூட்டணியில் இருப்பவர்கள் போனால் போகட்டும் எங்களுக்கு கவலை இல்லை.

    கடந்த முறை தேர்தலில் மசூதி பக்கம் செல்லவே முடியவில்லை. பா.ஜ.க.வை விட்டு வாருங்கள். நாங்கள் அனுமதிக்கிறோம் என்று இஸ்லாமியர்கள் கூறினார்கள். பா.ஜ.க.வை ஆதரித்ததால் மட்டுமே தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்களின் ஓட்டு எங்களுக்கு கிடைக்கவில்லை. இந்த முறை அப்படி இல்லை. இஸ்லாமியர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். எங்கள் தலைவரை இழிவாகப் பேசும் அண்ணாமலைக்கு எப்படி நாங்கள் துணை போவோம். நாங்க என்ன இழி பிறவியா?

    விஜய் கட்சியை சேர்ந்தவர்கள் சிறு பிள்ளைகள். 2026-ம் ஆண்டு தேர்தல் வரும்போது பார்க்கலாம். விஜய் கட்சி ஆரம்பித்ததால் பாதிப்பு தி.மு.க.வுக்கு தான். ஏனெனில், விஜய் ரசிகர்கள் பெரும்பகுதி தி.மு.க.வுக்கு வாக்களித்துள்ளனர். அதனால் விஜய் கட்சி ஆரம்பித்ததில் தி.மு.க.வுக்கு கோபம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சினிமா துறையில் இருந்து வந்த பாக்கியராஜ் கட்சி ஆரம்பித்தார்.
    • சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும்.

    மதுரை:

    மதுரை விளாங்குடியில் முன்னாள் அமைச்சரும், மதுரை மேற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    சினிமா துறையில் இருந்து வந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஒருவர் தான் கட்சி ஆரம்பித்து அரசியலில் சாதித்தவர்.

    31 ஆண்டு காலம் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி செய்து, வரலாறு படைத்தது. சினிமா துறையில் இருந்து வந்த சிவாஜி கணேசன் கட்சி ஆரம்பித்தார். அவர் சினிமாவில் அழுதால் மக்கள் அழுவார்கள். அவர் சிரித்தால் மக்கள் சிரிப்பார்கள். நடிப்பால் அவர் புகழ் பெற்றவர். ஆனால் கட்சி தொடங்கி அவரால் வெற்றி பெற முடியவில்லை.

    அதேபோல் சினிமா துறையில் இருந்து வந்த பாக்கியராஜ் கட்சி ஆரம்பித்தார். அடுக்குமொழியில் பேசும் டி.ராஜேந்தர் கட்சி ஆரம்பித்தார். போணியாகவில்லை. ரஜினி கட்சி அறிவித்தார். ஆனால் வாபஸ் வாங்கிவிட்டார்.

    ஊழலை ஒழிப்பேன், நீதி கேட்பேன் என கமல்ஹாசன் கட்சி தொடங்கினார். ஒரு தொகுதிக்காக தனது வாயை இப்போது வாடகைக்கு விட்டுவிட்டார்.

    தற்போது விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார். அவர் இளைஞர். நல்ல மனம் படைத்தவர். ஒரு லட்சியத்தோடு வருவதாக சொல்கிறார்.

    ஆனாலும் வருகின்ற 2026-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் மட்டுமல்லாமல், எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் ஆவார்.

    சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும். இதற்கு, வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் ஒரு முன்னோட்டமாக அமையும். கூட்டணி பற்றி எங்களுக்கு கவலை இல்லை. எங்களது கையே எங்களுக்கு பலம். தொண்டர்களின் பலம் எங்களுக்கு இருக்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வழக்குகளை பார்த்து, அ.தி.மு.க.வினர் பயப்படமாட்டார்கள்.
    • விவசாய குடும்பத்தில் பிறந்த எடப்பாடி பழனிசாமிதான், மு.க.ஸ்டாலினுக்கு மாற்று.

    மதுரை:

    மதுரையில் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மதுரை அரசு வக்கீல் பழனிசாமி, மதுரை மாவட்ட முதன்மை கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

    இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட கோர்ட்டு, செல்லூர் ராஜூ ஆஜராக வேண்டுமென நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி, நேற்று அவர் கோர்ட்டு்க்கு வந்து நீதிபதி சிவகடாட்சம் முன்னிலையில், ஆஜராகி விளக்கம் அளித்தார். வழக்கு அடுத்த மாதம் 21-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    பின்னர் கோர்ட்டில் இருந்து வெளியே வந்த செல்லூர்ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் உண்மையைத்தான் கூறினேன். இல்லாததை பேசவில்லை. அரசின் நிலை குறித்துதான் பேசினேன். அவதூறு வழக்கெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை. வழக்குகள் எல்லாம் எனக்கு 'சுஜூபி'. பொதுவாழ்க்கைக்கு வந்தால், மாலை வரும், மரியாதை வரும். ஜெயிலும் வரும். எல்லாவற்றையும் சந்திக்க தயாராக இருக்கிறேன். வழக்குகளை பார்த்து, அ.தி.மு.க.வினர் பயப்படமாட்டார்கள்.

    விவசாய குடும்பத்தில் பிறந்த எடப்பாடி பழனிசாமிதான், மு.க.ஸ்டாலினுக்கு மாற்று.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனை தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. கொடியை பயன்படுத்த தடைகோரிய வழக்கு குறித்து கேட்டபோது, "நாங்கள் புலிவேட்டைக்கு செல்கிறோம். எலி வேட்டையை பற்றி பேசாதீர்கள்" என கூறிச்சென்றார்.

    இதனை தொடர்ந்து செல்லூர் ராஜூ உள்ளிட்ட அ.தி.மு.க.வை சேர்ந்த வக்கீல்கள் ஊர்வலமாக வந்து கண்டன கோஷங்கள் எழுப்பியபடி அங்கிருந்து சென்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கருணாநிதி முதலமைச்சர் ஆவதற்கு எம்.ஜி.ஆர். தான் முழுக்க முழுக்க காரணம்.
    • முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அவர்கள் எழுதிக்கொடுத்த உரையை அப்படியே படித்துவிட்டு செல்கிறார்கள்.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    அண்ணாவுக்கு பிறகு தி.மு.க.வில் யார் முதலமைச்சராக வரவேண்டும் என்ற பிரச்சனை வந்தபோது, எல்லோரும் நாவலர் நெடுஞ்செழியனை சொல்லும்போது, எம்.ஜி.ஆர்.தான், முரசொலி மாறன் உள்ளிட்டோர் வந்து கேட்டதற்கு இணங்க நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோரிடம் பேசி கருணாநிதியை முதலமைச்சராக தேர்வு செய்ய செய்தார்.

    எனவே, கருணாநிதி முதலமைச்சர் ஆவதற்கு எம்.ஜி.ஆர். தான் முழுக்க முழுக்க காரணம். இதை கருணாநிதி எங்கள் தங்கம் திரைப்பட விழாவிலேயே சொல்லி இருக்கிறார். இது தான் வரலாறு.

    ஆனால், கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், ஏதோ கருணாநிதியை புகழ வேண்டும் என்பதற்காக தவறாக வரலாற்றை மறைத்து பேசியது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதே போன்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கருணாநிதியின் நூற்றாண்டு விழா நடத்தினார்கள். அங்கு 50 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்ட நிலையில் 899 பேர் தான் விழாவிற்கு வந்துள்ளனர். இதைவிட கருணாநிதியை கேவலப்படுத்தியது உலகத்தில் எதுவுமே இருக்காது. இந்த விழாவில், முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அவர்கள் எழுதிக்கொடுத்த உரையை அப்படியே படித்துவிட்டு செல்கிறார்கள். அதாவது, கருணாநிதியால் உயர்ந்தவர் தான் எம்.ஜி.ஆர். என்று கூறுகிறார்கள். இதனை தமிழ்நாடு ஏற்குமா? எம்.ஜி.ஆர். ரசிகர்கள் ஏற்பார்களா?

    எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருக்கும் வரை கருணாநிதி பதவியில் இருந்தார். தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். வெளியே வந்த பிறகு கருணாநிதியால் அமைச்சராகவோ, முதலமைச்சராகவோ ஆகமுடியவில்லை. 11 ஆண்டுகள் வனவாசம் அனுப்பி வைத்த மாபெரும் தலைவர் தான் எம்.ஜி.ஆர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • துன்பத்தில், சோதனையில் உள்ள மக்களுக்கு ஆதரவாக கமல்ஹாசன் பேசவில்லை.
    • வீராப்போடு மதுரையில் கட்சி தொடங்கி வீராப்பாக பேசிய கமல்ஹாசனின் வீராப்பு இப்போது எங்கே சென்றது?

    மதுரை:

    மதுரையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னையில் வெள்ளம் வடியவில்லை. மக்கள் வாழ் வாதாரம் இழந்துள்ளனர். அரசு செயலிழந்துவிட்டது. 40 நாட்களுக்கு முன்பாகவே புயல் குறித்து வானிலை ஆய்வாளர்கள் சுட்டிக் காட் டிய நிலையில் தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    முன்னெச்சரிக்கையாக அனைத்துமே மக்களுக்கு செய்துவிட்டோம் என அமைச்சர்கள் சொல்லி சொல்லி கடைசி வரை எதையுமே செய்யாமல் மக்களை ஏமாற்றி விட்டனர். தி.மு.க. அமைச்சர்கள் முதலமைச்சரையும் ஏமாற்றிவிட்டனர். அமைச்சர்கள் சொன்ன பொய்களால் உட மைகளை, சொத்துக்களை மக்கள் இழந்துவிட்டனர்.

    நடிகர் கமல்ஹாசனுக்கு அரசியல் அரிச்சுவடி தெரியாது. தேர்தலில் ஒரு சீட்டுக்காக தி.மு.க.விற்கு லாலி பாடுகிறார். தி.மு.க.வின் ஊதுகுழலாக கமல்ஹாசன் உள்ளார். கமல்ஹாசன் படத்தை மக்கள் இனி எந்த மாவட்டத்திலும் பார்க்க மாட்டார்கள்.

    துன்பத்தில், சோதனையில் உள்ள மக்களுக்கு ஆதரவாக கமல்ஹாசன் பேசவில்லை. பதுங்கு குழியில் இருந்து கமல்ஹாசன் தான் தற்போது வெளி வந்துள்ளார். அரசியல் நாகரிக மற்றவர் கமல்ஹாசன்.

    வீராப்போடு மதுரையில் கட்சி தொடங்கி வீராப்பாக பேசிய கமல்ஹாசனின் வீராப்பு இப்போது எங்கே சென்றது?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜனதாவுக்கும், எங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.
    • தி.மு.க.வில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் கொள்கைகளை அடமானம் வைத்துள்ளது.

    மதுரை:

    மதுரை மாவட்ட பாரதிய ஜனதாவைச் சார்ந்த மாவட்ட துணைத் தலைவர் ஜெயவேல், மாவட்ட இளைஞர் அணி தலைவர் பாரி ராஜா, செயற்குழு உறுப்பினர் ரவி ஆகியோர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன், மாவட்ட அவைத் தலைவர் அண்ணாதுரை, மாவட்ட துணை செயலாளர் ராஜா மாவட்ட பொருளாளர் குமார், எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் எம்.எஸ்.பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    இன்றைக்கு தே.மு.தி.க., பி.ஜே.பி.யை சேர்ந்த பலர் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளனர். இவர்கள் வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்கும், அதனை தொடர்ந்து எடப்பாடியாரை தமிழகத்தின் முதலமைச்சராக வருவதற்கும் பாடுபடுவோம் என்று கூறியுள்ளார்கள்.

    அண்ணா காலத்திலே சனாதனம் ஒழிக்கப்பட்டது. பல்வேறு மாற்றங்கள் வந்தது. சீர்திருத்த திருமணங்களை அண்ணா செய்து வைத்தார். அதனை தொடர்ந்து இருமொழி கொள்கை கடைபிடிக்கப்பட்டது.

    இன்றைக்கு அ.தி.மு.க.வில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர் தலைவராக உள்ளார். இதேபோல் தி.மு.க.வி.ல் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்களையும், பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் தலைவராக முடியுமா?

    பா.ஜனதாவுக்கும், எங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. தி.மு.க.வில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் கொள்கைகளை அடமானம் வைத்துள்ளது. நாங்கள் தேவரை தெய்வமாக வணங்குகிறோம். தேவருக்கு தங்க கவசத்தை அம்மா வழங்கினார்.

    கர்நாடகா தேர்தலில் பெண்களுக்கு 2000 ரூபாய் வழங்குவோம் என கூறினார்கள். தற்போது ஒரு கோடியே 30 லட்சம் பேருக்கு வழங்கி விட்டார்கள். ஆனால் தமிழகத்தில் 2 கோடியே 18 லட்சம் குடும்பங்கள் உள்ளது. இதில் ஒரு கோடி பேருக்கு வழங்கிவிட்டு மீதி பேருக்கு வழங்கவில்லை.

    மதுரை எம்ஜிஆர் விளையாட்டு திடலில் விளையாட்டு வீரர்கள் தங்க தங்க விடுதி, ஓய்வு அறை அமைக்க வேண்டும் என்று கூறினோம். இதுவரை எந்த நடவடிக்கை இல்லை. அதே போல் ஒவ்வொரு தொகுதியிலும் விளையாட்டு திடல் அமைக்கப்படும் என உதயநிதி கூறினார். எனது தொகுதியில் ஜெயஹிந்த்புரத்திலுள்ள இடத்தை தேர்வு செய்து கொடுத்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

    இன்றைக்கு டெங்கு, மலேரியா போன்ற நோய்களுக்கு எந்த நடவடிக்கையும் இல்லை. மதுரையில் 2 நாள் முகாமிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் சென்னை சென்ற பின் தனது தந்தையிடம் சொல்லி மதுரைக்கு சிறப்பு நிதியை ஒதுக்க சொல்வாரா?

    மேலும் உதயநிதி கூட்டத்தில் காலி சேர்கள் இருக்கக்கூடாது என்று ஆயிரம் ரூபாய் கொடுத்து உட்கார வைத்துள்ளனர். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை மோடிஜி கொண்டு வந்தார். ஆனால் காங்கிரஸால் கொண்டு வர முடியவில்லை. பிரதமர் மோடி நன்றாக தமிழ் பேசுகிறார். புதிய அவையில் கூட செங்கோல் வைத்து தமிழகத்தின் புகழை அறியச் செய்துள்ளார்.

    கடந்த 10 வருடம் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி இருந்தபோது எதையும் செய்யவில்லை. முல்லைப் பெரியாறு, கச்சதீவு பிரச்சனையை கூட தீர்க்கவில்லை.

    மோடி மீண்டும் பாரதப் பிரதமராக வருவார். தமிழகத்திலும் மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சராக வரவேண்டும். பா.ஜ.க.வுடன் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கட்சி நிர்வாகிகளுடன் 15-க்கும் மேற்பட்ட கார்களில் வைகை அணைக்கு சென்றேன்.
    • செய்தி பரவி உலகம் முழுவதும் என்னை அரசியல் விஞ்ஞானி என்று நெட்டீசன்களால் இப்போது வரை கலாய்க்கப்பட்டு வருகிறேன்.

    மதுரை:

    மதுரை விளாங்குடி பகுதியில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டு பேசியதாவது:-

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டுகளாக தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்தேன். ஆனால் ஒரே ஒரு சம்பவத்தின் மூலம் நான் உலகம் முழுவதும் அரசியல் விஞ்ஞானியாக கலாய்க்கப்பட்டு வருகிறேன். எனது சொந்தக்கதை, சோகக்கதையை இப்போதும் சொல்ல விரும்புகிறேன், நீங்களும் கேளுங்கள்.

    மதுரை மாவட்டத்தில் அப்போது வறட்சி நிலவியதால் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வறட்சி நிவாரண கூட்டம் அப்போதைய கலெக்டர் வீரராகவராவ் முன்னிலையில் நடைபெற்றது.

    அந்த சமயம் சித்திரை திருவிழா காலம் என்பதால் மதுரை வைகை ஆற்றில் 15 லட்சம் மக்கள் கூடும் நிலையை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் கள்ளழகர் வைகை ஆற்றில் தண்ணீரில் இறங்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டும் ஏற்பாடுகள் செய்ய அதிகாரிகளிடம் ஆலோசித்தேன்.

    அப்போது வைகை அணையில் தண்ணீர் குறைவாக இருந்தது. எனவே இருக்கும் தண்ணீரை வைத்து 4 அல்லது 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கலாம், அதற்குள் மழை வந்துவிடும் பிறகு நிலைமையை சமாளிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் எதிர்பார்த்த மழை இல்லை.

    இந்த நிலையில் 4 நாட்கள் கழித்து கலெக்டர் என்னை செல்போனில் அழைத்தார். நாம் வைகை அணைக்கு செல்ல வேண்டும். அங்கே முதன்மை பொறியாளர் ஒரு திட்டத்தை வைத்துள்ளார். அதன்மூலம் நீர் ஆவியாவதை தடுக்கலாம். அதன் மூலம் வைகை அணையில் நீரை ஓரளவு சேமிக்கலாம் என்றார்.

    இது தொடர்பாக கலெக்டர் மற்றும் முதன்மை பொறியாளரிடம் விளக்கம் கேட்டேன். அவர்களும் இது சாத்தியமானது தான். ராஜஸ்தான் பல்கலைக்கழகம் இதனை பரீட்சார்த்த முறையில் வெற்றிகரமாக செய்துள்ளது என்று தெரிவித்தனர்.

    நானும் கட்சி நிர்வாகிகளுடன் 15-க்கும் மேற்பட்ட கார்களில் வைகை அணைக்கு சென்றேன். அங்கு சென்றதும் அதிகாரிகள் அணையின் உள் பகுதியில் தெர்மாகோல் அட்டைகளை வரிசையாக அடுக்கி வைத்து தயாராக இருந்தனர். அப்போது நானும் அங்கு வைக்கப்பட்டிருந்த தெர்மாகோல் அட்டைகளை வைகை அணை தண்ணீரில் வைத்தேன். வைத்தது தான் தாமதம் அந்த நேரத்தில் வீசிய காற்றின் வேகத்தில் தெர்மாகோல் அட்டைகள் அனைத்தும் பறந்தன.

    இந்த செய்தி பரவி உலகம் முழுவதும் என்னை அரசியல் விஞ்ஞானி என்று நெட்டீசன்களால் இப்போது வரை கலாய்க்கப்பட்டு வருகிறேன். மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக ரிஸ்க் எடுத்தேன். அதற்காக ரஸ்க் ஆகி விட்டேன்.

    இவ்வாறு செல்லூர் ராஜூ கலகலப்பாக பேசினார்.

    அவரது பேச்சை ரசித்து கேட்டுக்கொண்டிருந்த அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் இதனை கேட்டு சிரித்தனர்.

    ×