செய்திகள்
முக்கடல் சங்கம மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி

கன்னியாகுமரி கடற்கரையில் நடந்த சமுத்திர தீர்த்த ஆரத்தி- 300 பேர் மீது வழக்கு

Published On 2021-09-21 06:48 GMT   |   Update On 2021-09-21 06:48 GMT
மகா சமுத்திர தீர்த்தத் திருவிழா மலரை வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரமத்தைச்சேர்ந்த ஸ்ரீமத் சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் வெளியிட்டார்.
கன்னியாகுமரி:

புரட்டாசி மாத பெளர்ணமி தினத்தையொட்டி குமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவை நடத்தும் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நேற்று மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை நடந்தது. நிகழ்ச்சிக்கு வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்த ஸ்ரீமத் சுவாமி சைதன்யானந்தஜி மஹராஜ் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பெருங்குளம் செங்கோல் ஆதீனம் 103-வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள், நாகப்பட்டினம் திருப்புகலூர் திருமடம் வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், மதுரை ஆதீனம் 293வது குருமகா சன்னிதானம் சிவ ஞான பானு ஸ்ரீலஸ்ரீ ஹரி ஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோர் கலந்துகொண்டு முக்கடல் சங்கம மகா சமுத்திர தீர்த்த ஆரத்தியை தொடங்கி வைத்தனர்.

பின்னர் மகா சமுத்திர தீர்த்தத் திருவிழா மலரை வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரமத்தைச்சேர்ந்த ஸ்ரீமத் சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியையொட்டி கன்னியாகுமரியில் நேற்று நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். நேற்று காலை வரை கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த நிகழ்ச்சிக்கு போலீஸ் அனுமதி வழங்கவில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் தொடர் முயற்சியின் பேரில் குறைந்த எண்ணிக்கையில் பக்தர்களுடன் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் கன்னியாகுமரி கடற்கரைக்கு செல்லும் அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டன. போலீசார் குவிக்கப்பட்டு கடற்கரைக்கு செல்லும் பக்தர்களை திருப்பி அனுப்பினர்.



இந்தநிலையில் நேரம் செல்லச்செல்ல ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். லேசான தள்ளுமுள்ளு நடந்தது. இதனை தொடர்ந்து போலீசாரின் தடையை மீறி பக்தர்கள் கடற்கரைக்கு சென்றனர்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ, பச்சைமால், முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதம் அய்யப்ப சேவா சங்க மாவட்டஅமைப்பாளர் நாஞ்சில் ராஜன், விசுவ இந்து பரி‌ஷத் மாநில தலைவர் குழைக்காதர், மாநில இணைச் செயலாளர் காளியப்பன், மாவட்ட செயலாளர் கார்த்திக், ஓருங்கிணைப்பாளர் கனகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கொரோனா விதிமுறையை மீறியதாக நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்து திருத்தொண்டர் பேரவை தலைவர் ராஜகோபால் உள்பட 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


Tags:    

Similar News