செய்திகள்
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் மழை நீரில் தத்தளித்து வரும் பஸ்சை படத்தில் காணலாம்.

விழுப்புரத்தில் விடிய விடிய மழை- பஸ் நிலையத்தை சூழ்ந்த தண்ணீர்

Published On 2021-07-18 04:12 GMT   |   Update On 2021-07-18 04:12 GMT
விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் பரவலாக கடந்த 4 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது.

விழுப்புரம்:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் கடலோர மாவட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் பரவலாக கடந்த 4 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது.

நேற்று இரவு விழுப்புரம் நகர் பகுதியில் திடீரென கருமேகம் சூழ்ந்தது. சிறிது நேரத்தில் பலத்த சூறைகாற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. விடிய விடிய பெய்த மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியது.

குறிப்பாக தாழ்வான பகுதியான புதிய பஸ் நிலையத்தில் மழைநீர் புகுந்தது. இதனால் பஸ்கள் மழை வெள்ளத்தில் தத்தளித்தபடி வந்தது. விழுப்புரம் சாலாமேடு ஹவுசிங்போர்டு பகுதியில் மழைவெள்ளம் தேங்கியபடி உள்ளது. இந்த தண்ணீரை அகற்றவேண்டும் என்று அங்கு வசிப்பவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே தரைபாலத்தில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அந்த வழியாக செல்லமுடியவில்லை. இந்த தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. இதேபோல மாவட்டத்தில் காணை, மாம்பழபட்டு, அரகண்டநல்லூர், செஞ்சி, கண்டமங்கலம், அரசூர், திருவெண்ணைநல்லூர், மரக்காணம் ஆகிய பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது.

ஆடி பட்டம் தேடிவிதை என்ற பழமொழிக்கேற்ப ஆடி மாதம் முதல் நாளில் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் தங்களது விளை நிலங்களில் உழவு பணியை தொடங்கி உள்ளனர்.

விழுப்புரம் பஸ் நிலையத்தில் தேங்கிய மழைநீரை மாவட்ட கலெக்டர் மோகன் பார்வையிட்டு அதனை வெளியேற்ற உத்தரவிட்டார். அதன்படி மழைநீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.

கடலூர் மாவட்டத்திலும் பரவலாக மழைபெய்தது. கடலூர் நகர் பகுதியான திருப்பாதிரிபுலியூர், துறைமுகம், கூத்தப்பாக்கம், மஞ்சக்குப்பம், பாதிரிகுப்பம் ஆகிய பகுதிகளிலும் விடிய விடிய லேசான மழை பெய்தது.

இதேபோல கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News