செய்திகள்
சென்னை ஐகோர்ட்டு

கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்க எவருக்கும் உரிமை இல்லை - ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2021-07-16 10:01 GMT   |   Update On 2021-07-16 10:01 GMT
கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்க வேறு எவருக்கும் உரிமையில்லை என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை:

திருவாரூர் மாவட்டம், திருப்பாம்புரத்தில் உள்ள சே‌ஷபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு, கிராம பஞ்சாயத்து தலைவர், கட்டணம் வசூலித்து வருவதாக கூறி, ராமு என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர், "சே‌ஷபுரீஸ்வரர் கோவில் இந்துசமய அறநிலையதுறை கட்டுப்பாட்டில் உள்ளதால், கோவில் நிலத்தில் வாகனங்கள் நிறுத்த, பஞ்சாயத்து தலைவர் கட்டணம் வசூலிப்பதற்கு எந்த அனுமதியும் கிடையாது. கோவில் நிலத்தில் வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூலிக்க எவருக்கும் உரிமையில்லை.

மேலும், இதுவரை கட்டணமாக வசூலிக்கப்பட்ட தொகை குறித்த கணக்குகளை பஞ்சாயத்து தலைவர் தாக்கல் செய்ய வேண்டும். வசூலிக்கப்பட்ட தொகையை அறநிலையத் துறை வசம் ஒப்படைக்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News