செய்திகள்
சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி

அத்தியாவசிய பொருட்கள் விற்க 4 வியாபாரிகளுக்கு தடை- மாநகராட்சி கமி‌ஷனர் நடவடிக்கை

Published On 2021-06-03 07:27 GMT   |   Update On 2021-06-03 07:27 GMT
பெருநகர சென்னை மாநகராட்சியால் கடந்த 1-ந்தேதியன்று மாதவரம், ஆலந்தூர் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சென்னை:

சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பழங்கள், முட்டை, ரொட்டி மற்றும் மளிகை பொருட்கள் ஆகியவை வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டிகள் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கே நேரில் சென்று விநியோகிக்க பெருநகர சென்னை மாநகராட்சியால் விற்பனையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு அவர்களின் வாகன போக்குவரத்துக்காக பதாகைகள், வில்லைகள் மற்றும் வாகன அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

இதுவரை மளிகை பொருட்களை விற்பனை செய்ய 4122 சில்லரை வணிகர்களுக்கும், 655 சூப்பர் மார்கெட் அங்காடிகளுக்கும் மற்றும் 457 மொத்த வியாபார வணிகர்களுக்கும் என மொத்தம் 5234 வணிகர்களுக்கு பதாகைகள், வில்லைகள் மற்றும் வாகன அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சியால் கடந்த 1-ந்தேதியன்று மாதவரம், ஆலந்தூர் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் உத்தேச சில்லறை விற்பனை விலையைவிட அதிக விலைக்கு விற்பனை மேற்கொண்ட 4 வியாபாரிகளிடம் இருந்து பதாகைகள், வில்லைகள் மற்றும் வாகன அனுமதி பாஸ் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் தொடர்ந்து வியாபாரம் மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் விற்பனை செய்யப்படும் காய்கனிகள் விலைப்பட்டியல் மற்றும் இதர புகார்கள் சம்பந்தமாக பெருநகர சென்னை மாநகராட்சி தலைமையிடத்து கட்டுப்பாட்டு அறையில் உள்ள 94999 32899 என்ற கைபேசி எண் மற்றும் 5 இணைப்புகளுடன் கூடிய 044-4568 0200 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News