செய்திகள்
கைது செய்யப்பட்ட மனேஜ்குமார், கவுதம் படத்தில் காணலாம்.

பேஸ்புக்கில் நட்பாக பழகி 9 பெண்களிடம் உல்லாசம் அனுபவித்த 2 வாலிபர்கள்

Published On 2021-04-30 04:18 GMT   |   Update On 2021-04-30 04:18 GMT
பேஸ்புக் மூலம் 9 பெண்களுடன் நட்பாக பழகி அவர்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்து பின்னர் அவர்களை மிரட்டி நகை- பணத்தை வாலிபர்கள் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரிஷிவந்தியம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கடுவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் உமைபாலன். இவரது மனைவி பாலின் ராணி (வயது 27). இவர் அதே கிராமத்தில் சொந்தமாக ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.

கடந்த ஜனவரி மாதம் இவரது பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் மூலம் ஒரு ஆண் நபர் நண்பராகி பழகி வந்துள்ளார். பின்னர் அந்த நபர் பாலின் ராணியை நேரில் பார்க்க அவரது ஜவுளி கடைக்கு வந்தார். அப்போது பாலின் ராணி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பார்த்துவிட்டுத் தருவதாக அந்த நபர் கேட்டார். இதை நம்பிய பாலின் ராணி அவர் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை கழற்றி அந்த நபரிடம் கொடுத்தார்.

இந்த நேரத்தில் கடைக்கு துணி எடுக்க வாடிக்கையாளர்கள் வந்ததால் பாலின் ராணி வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்தார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு அந்த நபர் அங்கிருந்து நைசாக வெளியே சென்று நகையுடன் காரில் தப்பி சென்றுவிட்டார்.

இதுகுறித்து பாலின் ராணி சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜி தலைமையில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் சங்கராபுரம் அருகே சு.குளத்தூர் மும்முனை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தனிப்படை போலீசார் தடுத்து நிறுத்தினர். காரில் இருந்த 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் 2 வாலிபர்களையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த மனோஜ் குமார் (வயது 27) அதே பகுதியைச் சேர்ந்த கவுதம்( 27) என தெரியவந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் கடுவனூர் கிராமத்தில் பாலின் ராணியிடம் நகையை பறித்து சென்றவர்கள் என்பதும் தெரிய வந்தது.

மேலும் இவர்கள் தமிழகம் முழுவதும் பேஸ்புக் மூலம் 9-க்கும் மேற்பட்ட பெண்களிடம் நைசாக பேசி நட்பாக பழகி உள்ளனர். பின்னர் அவர்களை ஏமாற்றி அந்தப் பெண்களிடம் உல்லாசம் அனுபவித்து உள்ளனர்.

அதன் பின்னர் அந்தப் பெண்களை மிரட்டி நகை மற்றும் பணத்தை பறித்துள்ளனர். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மனோஜ் குமார், கவுதம் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

கைதான 2 பேரிடம் இருந்து 4 அரை பவுன் தங்க நகை, இரண்டரை லட்சம் பணம் கார், பைக், செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

பேஸ்புக் மூலம் 9 பெண்களுடன் நட்பாக பழகி அவர்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்து பின்னர் அவர்களை மிரட்டி நகை- பணத்தை வாலிபர்கள் பறித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News