செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்ட பண்டாரம்பட்டி கிராம மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.

தூத்துக்குடியில் போராட்டம் நடத்திய கிராம மக்கள் 60 பேர் மீது வழக்கு

Published On 2021-04-28 09:18 GMT   |   Update On 2021-04-28 09:18 GMT
இன்று 3-வது நாளாக தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம், ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள பகுதி ஆகியவற்றுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை இயக்க சுப்ரீம் கோர்ட்டு நேற்று அனுமதி வழங்கியது.

இதனைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் மருத்துவ பயன்பாட்டிற்காக ஆக்சிஜன் உற்பத்தி பணிகள் விரைவில் தொடங்கப்படுகிறது. இந்நிலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு ஆலையை மீண்டும் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பண்டாரம்பட்டி கிராம மக்கள் ஊரின் மையப் பகுதியில் அமைந்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், டி.எஸ்.பி.க்கள் பிரகாஷ், பொன்னரசு ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பதால் இரவு 10 மணிக்கு மேல் போராட்டத்தை தொடரக்கூடாது எனவும் கேட்டுக் கொண்டனர். இதனை ஏற்று நாளை (இன்று) கலெக்டர் அலுவலகத்தில் இது தொடர்பாக மனு கொடுப்பதாக கூறி கலைந்து சென்றனர்.

இதேபோல் புதுத்தெரு கிராமமக்களும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சட்ட விரோதமாக கூடுதல், தொற்று காலத்தில் அனுமதி இன்றி போராட்டம் நடத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பண்டாரம் பட்டியை சேர்ந்த 40 பேர் மீதும் புதுத்தெருவை சேர்ந்த 20 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே தூத்துக்குடியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சட்டம்- ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி தலைமையில் நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவின் குமார் அபிநபு, கமி‌ஷனர் அன்பு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஜெயக்குமார் (தூத்துக்குடி), சுகுணாசிங் (தென்காசி), பத்ரி நாராயணன் (கன்னியாகுமரி) ஆகியோர் தூத்துக்குடியில் முகாமிட்டு கண்காணித்து வருகிறார்கள்.

இன்று 3-வது நாளாக தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம், ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள பகுதி ஆகியவற்றுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பதட்டமான பகுதிகளில் 700 போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர்.

முக்கிய இடங்களில் வஜ்ரா, வருண், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

சிப்காட் பகுதி, புறவழிச் சாலை மேம்பாலம், ஏற்கனவே போராட்டம் நடைபெற்ற பகுதிகள், ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள கிராம பகுதிகள் மற்றும் மாநகரில் உள்ள முக்கிய பகுதிகளிலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.


Tags:    

Similar News