செய்திகள்
நாகர்கோவில் பீச் ரோட்டில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடிய காட்சி.

குமரி மாவட்டத்தில் ‘திடீர்’ மழை- பேச்சிப்பாறையில் 19.4 மி.மீ. பதிவு

Published On 2021-03-09 04:17 GMT   |   Update On 2021-03-09 04:17 GMT
தோவாளை, ஆரல்வாய் மொழி, கன்னியாகுமரி, கொட்டாரம், சுசீந்திரம், திருவட்டார், தக்கலை பகுதிகளிலும் மழை பெய்தது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு, வடகிழக்கு என இரு பருவ காலங்களில் மழை பெய்து வருகிறது.

ஆனால் இரு பருவ காலங்களிலும் மழை போதுமான அளவு பெய்யவில்லை. சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் மதியம் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வருவதற்கே சிரமப்பட்டனர். இரவு நேரங்களில் அனல் காற்றும் வீசி வந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. பேச்சிப்பாறை அணை பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. பேச்சிப்பாறையில் அதிகபட்சமாக 19.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது.

காலை 6 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை 7.30 மணி வரை கொட்டி தீர்த்தது. இதனால் கோட்டார் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து ஓடியதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளானார்கள். மகளிர் கிறிஸ்தவக்கல்லூரி சாலை, அசம்பு ரோடு, மீனாட்சிபுரம் சாலைகளிலும் மழை நீர் ஆறாக ஓடியது.

தோவாளை, ஆரல்வாய் மொழி, கன்னியாகுமரி, கொட்டாரம், சுசீந்திரம், திருவட்டார், தக்கலை பகுதிகளிலும் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியில் சாரல் மழை பெய்தது. அருவியில் வெள்ளம் கொட்டி வருவதையடுத்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

பேச்சிப்பாறை நீர்மட்டம் 39.50 அடியாக உள்ளது. அணைக்கு 475 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் 861 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 54.70 அடியாக உள்ளது. அணைக்கு 72 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 361 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாவட்டம் முழுவதும் பெய்து வரும் மழை கோடை காலத்தை வெப்பத்தை குறைக்கும் வகையில் இருந்தது.
Tags:    

Similar News