செய்திகள்
மெட்ரோ ரெயில்

வண்ணாரப்பேட்டை- விம்கோநகர் மெட்ரோ ரெயிலில் 3 நாளில் 27 ஆயிரம் பேர் பயணம்

Published On 2021-02-19 06:40 GMT   |   Update On 2021-02-19 06:40 GMT
வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் வழித்தடத்தில் கடந்த 3 நாட்களில் மட்டும் (15-ந்தேதி முதல் 17 வரை) 27,364 பேர் பயணம் செய்துள்ளனர்.
சென்னை:

சென்னை வண்ணாரப்பேட்டை-விம்கோநகர் இடையே மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டப் பணிகள் முடிந்து கடந்த 14-ந் தேதி திறக்கப்பட்டது.

இதையடுத்து மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் சேவை முழுமையாக நடைபெற்று வருகின்றன. தொடக்க விழாவையொட்டி முதல் நாளில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது.

இதனால் அன்றைய தினம் 1.40 லட்சம் பேர் பயணம் செய்தனர். வண்ணாரப்பேட்டை - விம்கோநகர் வழித்தடத்தில் 39,280 பேர் இலவசமாக பயணித்தனர். கடந்த திங்கட்கிழமை முதல் கட்டண பயணம் தொடங்கியது. இதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில் வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் வழித்தடத்தில் கடந்த 3 நாட்களில் மட்டும் (15-ந் தேதி முதல் 17 வரை) 27,364 பேர் பயணம் செய்துள்ளனர்.

பிப்ரவரி 15-ந் தேதி 9,972 பேரும், 16-ந் தேதி 8,942 பேரும், 17-ந் தேதி 8,450 பேரும் பயணம் செய்துள்ளனர். சராசரியாக 9 ஆயிரம் பேர் பயணம் செய்கிறார்கள்.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், வட சென்னை மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதில் ரெயில் சேவை முக்கிய பங்கு வகிக்கும். புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை தொடர்பாக வட சென்னை மக்களுக்கு மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.
Tags:    

Similar News