செய்திகள்
மணப்பாறை அருகே ஆ.கலிங்கப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு

கலிங்கப்பட்டியில் களமாடிய காளைகளால் களை கட்டிய ஜல்லிக்கட்டு

Published On 2021-02-18 06:33 GMT   |   Update On 2021-02-18 06:33 GMT
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கலிங்கப்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
மணப்பாறை:

திருச்சி மாவட்டம் மணப்பாறையை ஒட்டிய பல்வேறு ஊர்களில் ஆண்டுதோறும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த வாரம் பொத்த மேட்டுப்பட்டி, வையம்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.

இதன் தொடர்ச்சியாக இன்று ஆ.கலிங்கப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதனை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி தொடங்கி வைத்தார். இதில் வட்டாட்சியர் லெஜபதிராஜ், போலீஸ் துணை சூப்பிரண்ட் பிருந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதலில் ஸ்ரீமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாட்டிற்கு பின்னர் கோவில் காளை வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. அந்த காளையை யாரும் பிடிக்கவில்லை. இதைத் தொடர்ந்து திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது.

சில காளைகள் களத்தில் நின்று தன்னை அடக்க வந்த வீரர்களை பந்தாடியது. மேலும் தனது அருகில் கூட நெருங்க விடாமல் விரட்டி அடித்தது. இருப்பினும் பல காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். நன்றாக பயிற்சி பெற்ற ஒரு சில காளைகள் மைதானத்தில் சில நிமிடங்கள் வரை நின்று களமாடியது. இதனை அனைவரும் ரசித்தனர்.

இதில் வெற்றி பெற்ற காளைக்கு அதன் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் கட்டில், பீரோ உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

இதே போல் சிறந்த காளை மற்றும் வீரர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகளும், 400 வீரர்களும் பங்கேற்றுள்ளனர். ஜல்லிக்கட்டை காண திரளானோர் கலந்து கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News