செய்திகள்
கிணற்றில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீரில் தீ கொழுந்துவிட்டு எரியும் காட்சி.

குடிநீர் கிணற்றில் பெட்ரோல் ஊற்று எடுத்ததால் பரபரப்பு

Published On 2021-01-27 04:45 GMT   |   Update On 2021-01-27 08:03 GMT
குமரி, கேரள எல்லையில் குடிநீர் கிணற்றில் பெட்ரோல் ஊறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி:

குமரி-கேரள எல்லை பகுதியான பனச்சமூடு, புலியூர்சாலை பகுதியை சேர்ந்தவர் கோபி. இவரது வீட்டின் முன்பு குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்று தண்ணீரைதான் கோபியின் குடும்பத்தினர் தங்களது அன்றாட தேவைக்கு பயன்படுத்தி வருகிறார்கள். கடந்த 6 நாட்களாக கிணற்றில் இருந்து எடுக்கப்பட்ட குடிநீரில் பெட்ரோல் வாசம் வந்து கொண்டிருந்தது. இதனால், சந்தேகம் அடைந்த கோபி தண்ணீரை வாளியில் எடுத்து தீ வைத்து சோதித்து பார்த்தார். அப்போது தண்ணீர் கொழுந்துவிட்டு எரிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால், தண்ணீரில் பெட்ரோல் கலந்திருப்பது உறுதியானது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பலரும் கோபியின் வீட்டுக்கு சென்று பெட்ரோல் கலந்த தண்ணீரை பார்த்தனர்.

மேலும் போலீசாருக்குதகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

கோபியின் வீட்டையொட்டி தமிழக பகுதியில் ஒரு பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. இங்கு பெட்ரோல் சேமிப்பு கலன் பல அடி ஆழத்தில் நிலத்திற்குள் புதைத்து வைக்கப்பட்டுள்ளது. அந்த கலனின் சேதம் ஏற்பட்டு பெட்ரோல் கசிந்து கோபியின் வீட்டு குடிநீர் கிணற்றில் ஊறியிருக்கலாம் என தெரிகிறது.

இதுபோல் அந்த பகுதியை சேர்ந்த மேலும் பல குடிநீர் கிணற்றிலும் பெட்ரோல் கலந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதனால், உடல்நல பாதிப்பு உள்பட பேராபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.

இதுதொடர்பாக இரு மாநில அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News