செய்திகள்
வைகை அணை

69 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம்

Published On 2021-01-16 07:40 GMT   |   Update On 2021-01-16 07:40 GMT
வருசநாடு, வெள்ளி மலைப்பகுதியில் பெய்த தொடர்மழையால் வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியது.
கூடலூர்:

தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

ஆண்டிபட்டி அருகே வருசநாடு, வெள்ளிமலை, அரசரடி, கடமலைக்குண்டு, கண்டமனூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் மூலவைகை யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மேலும் வைகை அணைக்கும் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த வாரம் 58 அடியில் இருந்த அணையின் நீர்மட்டம் வேகமாக உயரத் தொடங்கியது. இன்று காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 69.03 அடியாக உயர்ந்துள்ளது.

நேற்று 3 மாவட்ட மக்களுக்கு முதல் மற்றும் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 69 அடியை எட்டியுள்ளதால் இன்று 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வைகை ஆற்றில் துணி துவைக்கவோ, குளிக்கவோ, ஆற்றை கடக்கவோகூடாது என பொதுப்பணித்துறையினர் எச்சரித்துள்ளனர். மேலும் தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அணைக்கு நீர்வரத்து 3961 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக 319 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து ஒரே வாரத்தில் 8 அடி உயர்ந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 129.75 அடியாக உள்ளது. 3967 கன அடி நீர் வருகிறது. தண்ணீர் திறப்பு 767கன அடியில் இருந்து 100 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி. 297 கன அடி நீர் வருகிறது. 70 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.77 அடியாக உள்ளது. 335 கன அடி நீர் வருகிறது. 27 கன அடி நீர் பாசனத்திற்காகவும், 308 கன அடி நீர் உபரியாகவும் திறக்கப்படுகிறது.

தேக்கடி 3, சண்முகாநதி அணை 3, மஞ்சளாறு 1, கொடைக்கானல் 2.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
Tags:    

Similar News