செய்திகள்
பூண்டி ஏரி

பூண்டி ஏரிக்கு 3 மாதங்களில் 4.329 டி.எம்.சி. தண்ணீர் வந்தது

Published On 2020-12-18 04:20 GMT   |   Update On 2020-12-18 04:20 GMT
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கடந்த 3 மாதங்களில் 4.329 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது.
ஊத்துக்கோட்டை:

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற தமிழக அரசு 1983-ம் ஆண்டு ஆந்திர அரசுடன் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்ட ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தின் படி ஆந்திர அரசு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.

ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும். அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் 21-ந்தேதி முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு பின்னர் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. தற்போது வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

இந்த தண்ணீர் நேற்று காலை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வினாடிக்கு 606 கன அடி வீதமும், பூண்டி ஏரிக்கு 506 கனஅடி வீதமும் வந்து கொண்டிருந்தது. கடந்த செப்டம்பர் மாதம் 21-ந் தேதி முதல் நேற்று வரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 4.329 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை நீர்மட்டம் 34.57 அடியாக பதிவானது. 3005 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு இருந்தது. ஏரிக்கு மழைநீர் வினாடிக்கு 855 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்தது.

பூண்டி ஏரியில் இருந்து இணைப்பு கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு வினாடிக்கு 150 கனஅடி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 113 கணஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதேபோல் பேபி கால்வாய் வழியாக சோழவரம் ஏரி மற்றும் சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 21 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பூண்டி ஏரியில் இருந்து மதகு வழியாக கொசஸ்தலை ஆற்றில் வினாடிக்கு 976 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
Tags:    

Similar News