செய்திகள்
மாற்றுத்திறனாளிக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கியபோது எடுத்த படம்.

கோரிக்கை மனு அளித்த உடனேயே மாற்றுத்திறனாளிக்கு அரசு வேலை வழங்கிய எடப்பாடி பழனிசாமி

Published On 2020-12-05 02:13 GMT   |   Update On 2020-12-05 02:13 GMT
கோரிக்கை மனு அளித்த உடனேயே, 2 கால்கள் இல்லாத மாற்றுத்திறனாளிக்கு ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு வேலை வழங்கி உத்தரவிட்டார்.
சென்னை:

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள், மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக மதுரையில் இருந்து கார் மூலமாக சிவகங்கை நோக்கி சென்றுகொண்டிருந்தார். அவருடைய வாகனம் மதுரை முக்கு இடத்துக்கு சென்றபோது சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த அமானுல்லா என்பவரது மகன் அ.மஸ்தான் பாதுஷா கோரிக்கை மனுவுடன் சாலையோரம் காத்திருந்தார்.

ஒரு மாற்றுத்திறனாளி தனது கையில் கோரிக்கை மனுவுடன் காத்திருப்பதை கண்டறிந்த எடப்பாடி பழனிசாமி தனது காரை நிறுத்தி மாற்றுத்திறனாளியிடம் மனுவை பெற்றுக்கொண்டு, ‘உங்களுக்கு என்ன தேவை?’ என கேட்டார். அப்போது, ‘நான் 2 கால்களும் ஊனமுற்ற மாற்றுதிறனாளியாக உள்ளேன். நான் பி.பி.ஏ., பி.ஜி.டி.சி.ஏ. வரை படிப்பு முடித்துள்ளேன். ஆகவே எனக்கு ஏதாவது ஒரு அரசுத் துறையில் பணியிடம் வழங்கவேண்டும்’என்று கோரிக்கை வைத்தார்.

மாற்றுத்திறனாளியின் கோரிக்கையை கனிவுடன் கேட்டறிந்த எடப்பாடி பழனிசாமி, உடனடியாக சுகாதாரத்துறை அலுவலர்களிடம் தொடர்பு கொண்டு இரண்டு கால்களும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிக்கு ஏதாவது பணியிடம் உடனடியாக வழங்கவேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி 2 கால்களும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி அ.மஸ்தான் பாதுஷாவுக்கு காரைக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கி பிரிவில் விவர உள்ளிட்டாளர் பணிக்கு நியமனம் செய்யுமாறு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வரவழைத்து அங்கு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு, எடப்பாடி பழனிசாமி பணி நியமன ஆணையை வழங்கினார். மனு அளித்த சில மணிநேரத்திலேயே உடனடி நடவடிக்கை எடுத்து, தனது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு மாதம் ரூ.15 ஆயிரம் ஊதியம் பெறுவதற்கான வழிவகை செய்த எடப்பாடி பழனிசாமிக்கு, மாற்றுத்திறனாளி நெஞ்சார்ந்த நன்றியை, மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News