செய்திகள்
மழை

பருவமழையால் கோவையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது

Published On 2020-11-20 06:42 GMT   |   Update On 2020-11-20 06:42 GMT
கடந்த அக்டோபர் மாதத்தில் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு வட்டாரங்களை தவிர்த்து 9 வட்டாரங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
கோவை:

கோவை மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 133 திறந்த வெளி கிணறுகள், 32 ஆழ்துளை கிணறுகள் உள்ளன. இந்த கிணறுகளில் மாதந்தோறும் பொதுப்பணித்துறையினர் நிலத்தடி நீர்மட்டத்தை அளவீடு செய்து அறிக்கை சமர்ப்பித்து வருகின்றனர்.

கோவையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கூடுதலாக பெய்ததன் காரணமாக நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்துள்ளது.

கோவையில் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை, தொண்டாமுத்தூர், சுல்தான்பேட்டை, சூலூர் உள்பட 12 வட்டாரங்களில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கிணறுகளில் மாதந்தோறும் நிலத்தடி நீர்மட்டம் கணக்கிடப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த அக்டோபர் மாதத்தில் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு வட்டாரங்களை தவிர்த்து 9 வட்டாரங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு மாவட்டம் முழுவதும் 0.10 மீட்டரில் இருந்து 2.18 மீட்டர் வரை நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சுல்தான்பேட்டையில் 2.18 மீட்டரும், மதுக்கரையில் 2 மீட்டர், தொண்டாமுத்தூரில் 1.78 மீட்டர் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

நிலத்தடி நீர்மட்டத்தை அளவீடு செய்வதற்காக மின்னணு கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது டேப் மூலமே அளவீடு செய்யப்பட்டு வருகிறது.

சோதனை முயற்சியாக 10 சதவீத கிணறுகளில் மின்னணு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் துல்லியமாகவும், எளிதாகவும் நிலத்தடி நீர்மட்டத்தை பெற முடியும். தொடர்ந்து எதிர்வரும் காலங்களில் அனைத்து கிணறுகளிலும் நீர்மட்டத்தை அளவிடும் மின்னணு கருவி பொருத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News