செய்திகள்
தட்டார்மடம் வியாபாரி செல்வன்

தட்டார்மடம் கொலை வழக்கு- சிபிசிஐடி போலீசாரிடம் வியாபாரியின் மனைவி வாக்குமூலம்

Published On 2020-09-26 07:53 GMT   |   Update On 2020-09-26 07:53 GMT
தட்டார்மடம் வியாபாரி கொலை வழக்கில் அவரது மனைவி வாக்குமூலத்தையும், குடும்பத்தாரின் வாக்குமூலத்தையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதிவு செய்தனர்.
சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடம் சொக்கன்குடியிருப்பை சேர்ந்த தண்ணீர் கேன் வியாபாரியான செல்வன் கடந்த 17-ந்தேதி காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ராமன், சின்னதுரை, முத்துராமலிங்கம் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான திருமணவேல், அவரது சகோதரர் முத்து கிருஷ்ணன் ஆகியோர் சென்னை கோர்ட்டில் சரண் அடைந்தனர். இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு அனில் குமார் தலைமையில் 6 குழுக்கள் விசாரணையை தொடங்கியது.

இந்நிலையில் 2-வது நாளாக நேற்று மாலை 3 மணிக்கு தட்டார்மடம் போலீஸ் நிலையத்துக்கு சென்ற சி.பி.சி.ஐ.டி. போலீசார் அங்கு சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் தலைமையில் 12 போலீசார் கொண்ட குழு மாலை 5 மணி அளவில் செல்வனின் வீட்டுக்கு சென்றது.

செல்வனின் மனைவி ஜீவிதா, பெற்றோர் தனிஷ்லாஸ்-எலிசபெத் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். தொடர்ந்து செல்வனின் சகோதரர்கள் பீட்டர் ராஜா, பங்காரு ராஜா ஆகியோரிடமும் துருவி துருவி விசாரணை நடத்தினர்.

செல்வன் கொலை செய்யப்பட்ட சம்பவம் எப்படி தெரியவந்தது என சி.பி.சி.ஐ.டி போலீசார் கேட்டதற்கு, தட்டார்மடம் போலீசார் தான் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர் என்றும், நிலத்தகராறு தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனைக்கு போலீசார் எனது கணவர் மற்றும் கொழுந்தனார்கள் மீது 6 பொய் வழக்குகளை பதிவு செய்தனர். திருமணவேல் அரசியல் பிரமுகர் என்பதால் அவர் போலீசாரை துணையாக கொண்டு எனது கணவரை கொன்று விட்டார் என்று ஜீவிதா கண்ணீர் மல்க வாக்குமூலம் அளித்தார்.

அவரது வாக்குமூலத்தையும், குடும்பத்தாரின் வாக்குமூலத்தையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதிவு செய்து கொண்டனர். இரவு 12 மணி வரை நீடித்த இந்த விசாரணையில் செல்வனின் உறவினர்கள் பலரிடமும் துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டது.

இன்று கொலையாளிகள் செல்வனை காரில் கடத்திய இடம், காரில் வைத்து அவரை தாக்கிய உருட்டுகட்டை, சுத்தியல், அரிவாள் உள்ளிட்டவற்றை சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆய்வு செய்கின்றனர்.

வருகிற 28-ந்தேதி (திங்கள்கிழமை) சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருமணவேல் உள்பட 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனுத்தாக்கல் செய்ய உள்ளனர்.

Tags:    

Similar News