செய்திகள்
கரையோர பகுதியில் உள்ள வீடுகளை தொட்டபடி தண்ணீர் செல்லும் காட்சி

பில்லூர் அணையில் தண்ணீர் திறப்பு- கரையோர பகுதி மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை

Published On 2020-09-21 10:35 GMT   |   Update On 2020-09-21 10:35 GMT
மழை காரணமாக நீர்மட்டம் 97 அடியை எட்டியதால் பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
மேட்டுப்பாளையம்:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் பில்லூர் அணை உள்ளது. இது நீலகிரி மாவட்டம் மற்றும் கேரளாவில் பெய்யும் மழை நீரை ஆதாரமாக கொண்டு கட்டப்பட்டது. இதன் கொள்ளளவு 100 அடி ஆகும். நேற்றுமுன்தினம் இரவு நீலகிரி மாவட்டம் மற்றும் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. நேற்று காலை அணையின் நீர்மட்ட உயரம் 95 அடியாக இருந்தது. காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

இதனால் நீர்மட்டம் 97 அடியாக உயர்ந்தது. எனவே அணையின் பாதுகாப்பு கருதி அணையில் 4 மதகுகள் திறக்கப்பட்டன. அதன் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறியது இதனால் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பவானி அம்மன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.

இந்த நிலையில் மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம் தலைமையில் வீரர்கள் தீயணைப்பு வாகனத்துடன் பவானி ஆற்று பாலத்திற்கு சென்று சைரன் ஒலித்து பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை செய்தனர்.

கோவையிலும் நேற்று பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலைகள் மற்றும் மார்க்கெட்டுகள் சேறும், சகதியுமாக மாறி காட்சி அளிக்கிறது.
Tags:    

Similar News