செய்திகள்
பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் தரைப்பாலத்தின் மேல் வெள்ளம் பாய்ந்து செல்வதை காணலாம்

பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலங்கள்- பொதுமக்கள் அவதி

Published On 2020-09-16 02:07 GMT   |   Update On 2020-09-16 02:07 GMT
கிருஷ்ணாபுரம் அணை திறக்கப்பட்டதால் பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
பள்ளிப்பட்டு:

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அம்மபள்ளி கிராமத்தில் கிருஷ்ணாபுரம் அணை உள்ளது. கடந்த சில நாட்களாக அணையின் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் இந்த அணை நிரம்பியது. இதையடுத்து கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அணையில் இருந்து வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. கொசஸ்தலை ஆற்றில் நள்ளிரவு 12 மணிக்கு இந்த தண்ணீர் பள்ளிப்பட்டு பகுதியை கடந்தது.

இதனால் பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் வெளியகரம், சாமந்தவாடா, நெடியம் கிராமங்களை ஒட்டி உள்ள தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. நேற்று காலை 8 மணி வரை தண்ணீர் பாய்ந்தது. இதனால் இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பாலத்தை கடந்து செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது குறித்து விரைந்து தகவல் தெரிவிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News