செய்திகள்
காமராஜர் அணை

ஆத்தூர் காமராஜர் அணையில் அதிகாரிகள் ஆய்வு

Published On 2020-09-03 10:24 GMT   |   Update On 2020-09-03 10:24 GMT
ஆத்தூர் காமராஜர் அணையில் நீர்வரத்து பாதையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஆத்தூர்:

திண்டுக்கல் அருகே மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது ஆத்தூர் காமராஜர் அணை. கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் மழை பெய்யும்போது அணைக்கு நீர்வரத்து இருக்கும். இந்த அணை மூலம் திண்டுக்கல், சின்னாளபட்டி, செம்பட்டி, சித்தையன்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் குடிநீர் பூர்த்தி செய்யப்படுகிறது.

அணைக்கு வரும் நீர் வரத்து பாதையில் நரசிங்கபுரம் அருகே வாய்க்கால் பிரிந்து பாறைகள் வழியாக தண்ணீர் ராஜவாய்க்கால் வழியாக கூழையாற்று தண்ணீருடன் சேர்ந்து காமராஜர் அணை, புல்வெட்டி கண்மாய், நரசிங்கபுரம், நடுக்குளம், கருங்குளம் வழியாக ரெட்டியார்சத்திரம் செல்கிறது. கால்வாய் அமைக்கும் பணியின்போது பொதுப்பணித்துறை அதிகாரிகளின் பாறைகளை இடுக்குகளை மூடிவிட்டனர். இதனால் கடந்த 4 ஆண்டுகளாக காமராஜர் அணை மற்றும் ரெட்டியார்சத்திரம் பகுதிக்கு குறைந்தஅளவு தண்ணீரே வருகிறது.

இதுகுறித்து குடகனாறு பாசன விவசாயிகள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். மழை பெய்யும்போது தங்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடவேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

24 அடி உயரம் கொண்டு ஆத்தூர் காமராஜர் அணையில் தற்போது 11.3 அடிவரை நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 2 கனஅடி நீர் வருகிறது. மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜ் தலைமையில் உதவி பொறியாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் வரத்து பாதையை ஆய்வு செய்தனர்.

மேலும் ஆத்தூர், நரசிங்கபுரம், குடகனாறு பகுதி விவசாயிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தனர். பின்னர் மாவட்ட கலெக்டர் தலைமையில் அனைத்து தரப்பினரும் கலந்து பேசி நிரந்தர தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News