செய்திகள்
97 வயது தியாகி மனைவியுடன் உண்ணாவிரதம் இருந்தபோது எடுத்த படம்.

சுதந்திர தின நாளில் 97 வயது தியாகி மனைவியுடன் உண்ணாவிரதம்

Published On 2020-08-16 09:21 GMT   |   Update On 2020-08-16 09:21 GMT
ஜோலார்பேட்டை அருகே 97 வயது தியாகி தள்ளாத வயதில் சுதந்திர தின நாளில் உண்ணாவிரதம் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராம பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 97), சுதந்திர போராட்ட தியாகி. கூரை வேய்ந்த வீட்டில் வசித்து வருகிறார். சுதந்திர தின நாளான நேற்று இவர் தனது மனைவியுடன் வீட்டின் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். தள்ளாத வயதில் அதுவும் சுதந்திர தின நாளில் இவர் உண்ணாவிரதம் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அவர் கூறியதாவது:-

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான எந்த ஒரு அடிப்படை நலத்திட்ட உதவிகளையும் மத்திய-மாநில அரசுகள் செய்யவில்லை. சுதந்திரத்திற்காக பாடுப்பட்டவர்களில் ஒருவனாகிய நான் குடிசை வீட்டில் கஷ்டப்பட்டு வருகிறேன். மத்திய அரசு வழங்கும் பென்ஷன் உதவியை பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கும் 15 ஏக்கர் இலவச நிலம் வழங்க வேண்டும். எனது சொந்த இடத்தை பட்டாவில் அரசு வழிப்பாதை என்று தவறுதலாக குறிப்பிட்டுள்ளதை திருத்தி பட்டா வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை கலெக்டரிடம் மனு அளித்தேன். ஆனால் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் சுதந்திர தினத்தன்று எனது மனைவியுடன் உண்ணாவிரதம் இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சென்று நாராயணசாமியிடம் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர். அவர்கள், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துவிட்டு சென்றனர். இதனையடுத்து கணவன்- மனைவி இருவரும் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டனர்.
Tags:    

Similar News