செய்திகள்
கிருஷ்ணகிரி அணையில் பொறியாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

கிருஷ்ணகிரி அணையில் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கப்படும்- பொறியாளர் தகவல்

Published On 2020-08-04 07:02 GMT   |   Update On 2020-08-04 07:02 GMT
கிருஷ்ணகிரி அணையில் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கி வைக்கப்படும் என்று சென்னை மண்டல தலைமை பொறியாளர் அசோகன் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அணையின் மதகுகள் சீரமைக்கும் பணி நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த பணிகளை சென்னை மண்டல தலைமை பொறியாளர் (நீர் வள ஆதார அமைப்பு) அசோகன் நேற்று நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மதகுகளின் கீழ் பகுதிக்கு மோட்டார் படகில் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, கண்காணிப்பு பொறியாளர் (பெண்ணையாறு வடிநிலம்) சுரேஷ், செயற்பொறியாளர் மெய்யழகன், உதவி செயற்பொறியாளர் சரவணகுமார், அணை உதவி பொறியாளர் சையத் ஜாகீருதின் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர். பின்னர் தலைமை பொறியாளர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியமுத்தூர் கிராமத்தில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே 1957-ம் ஆண்டு இந்த கிருஷ்ணகிரி அணை கட்டப்பட்டது. இந்த அணையின் முழு கொள்ளளவு 52 அடியாகும். இதன் மூலம் 9,012 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ந் தேதி அணையின் உபரிநீர் வெளியேறும் மதகு எண்.1-ல் உடைப்பு ஏற்பட்டு நீர் வேகமாக வெளியேறியது. இதையடுத்து கடந்த 2018-19-ம் ஆண்டின் முதல் போக சாகுபடியை கருத்தில் கொண்டு உபரிநீர் வழிந்தோடிய மதகை மாற்றி அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டு, அதற்காக ரூ.3 கோடி வழங்கியது.

இதையடுத்து அந்த மதகை மாற்றி அமைக்கும் பணி கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி பணிகள் முடிக்கப்பட்டது. பின்னர் உறுதி தன்மையற்ற மீதமிருந்து 7 பிரதான மதகுகளையும் ரூ.20 கோடியே 43 லட்சம் மதிப்பில் சீரமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. இதற்கான ஒப்பந்தம் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30-ந் தேதி போடப்பட்டது. இந்த பணியின் ஒப்பந்த காலம் 24 மாதங்கள் ஆகும்.

இதற்கான பணி கடந்த ஜனவரி மாதம் 2-ந் தேதி தொடங்கியது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்து, அறிவுரை வழங்கினார்.

புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, கொரோனா பரவல் சூழ்நிலையிலும் துரிதமாக செயல்பட்டு 7 மாதங்களுக்குள் இந்த பணி சிறப்பாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. இன்று (அதாவது நேற்று) முதல் அணையில் முழு கொள்ளளவிற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News