செய்திகள்
காய்கறிகள்

மாதவரம்-நந்திவரத்தில் புதிய காய்கறி மார்க்கெட்

Published On 2020-05-11 06:08 GMT   |   Update On 2020-05-11 06:08 GMT
கோயம்பேடு மார்க்கெட்டை இன்னும் 2 இடங்களில் உருவாக்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
சென்னை:

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இட நெருக்கடி இருப்பதால் ஊரடங்கு உத்தரவுக்கு பிறகு மீண்டும் அங்கு மார்க்கெட் செயல்படும் என வியாபாரிகள் நம்பிக்கையில் உள்ளனர்.

ஆனால் கொரோனா வைரஸ் பரவுவது சென்னையில் அதிகரித்துக் கொண்டு செல்வதால் திருமழிசையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மொத்த வியாபார காய்கறி மார்க்கெட் குறைந்தது 6 மாத காலம் அங்கு செயல்படும் என தெரிகிறது.

மழைக்காலங்களில் திருமழிசை மார்க்கெட்டில் தண்ணீர் தேங்கினால் என்ன செய்வது என்ற யோசனையும் அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இங்கு வந்து செல்லும் வேன், லாரிகள் மணலில் புதைந்துவிட்டால் அதை வெளியே எடுப்பது சிரமம் ஆகிவிடும் என்பதால் தார் சாலையும் அங்கு கூடுதலாக போட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் மீண்டும் கோயம்பேடு மார்க்கெட் செயல்பாட்டுக்கு வரும் போது அங்கு கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக மார்க்கெட்டை இன்னும் 2 இடங்களில் உருவாக்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக கூடுவாஞ்சேரி நந்திவரத்தில் 16 ஏக்கர் நிலப்பரப்பில் காய்கறி மார்க்கெட்டை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிதாக அமைய இருக்கும் பஸ் நிலையத்துக்கு அருகே இந்த மார்க்கெட்டுக்கு இடத்தை தேர்வு செய்துள்ளனர்.

இதேபோல் மாதவரம் அருகேயும் 20 ஏக்கரில் மொத்த காய்கறி வியாபாரம் செய்வதற்கு வசதியாக ஒரு மார்க்கெட்டை உருவாக்கவும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் திட்டமிட்டுள்ளது. மிக விரைவில் இந்த இரண்டு மார்க்கெட்டையும் கட்டி முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
Tags:    

Similar News