செய்திகள்
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மருத்துவர்கள்

மதுரையை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு

Published On 2020-04-01 10:21 GMT   |   Update On 2020-04-01 10:21 GMT
டெல்லி மாநாட்டில் பங்கேற்ற மதுரையை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
மதுரை:

டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு அமைப்பு சார்பில் நடந்த மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இவர்களில் பலருக்கு கொரோனா பாதிப்பு அறிகுறி இருந்தது. இதையடுத்து மத்திய அரசு உத்தரவுப்படி தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்களை கண்டறிந்து மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தினர்.  மேலும் அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த மாநாட்டில் மதுரையில இருந்து சிலர் கலந்து கொண்டனர். அவர்களை கண்டறிந்த சுகாதாரத்துறையினர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களது ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதில் டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து 2 பேரும் சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மதுரையில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட 54 வயது காண்டிராக்டர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது மனைவி, மகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது மூத்த மகனுக்கும், ராஜபாளையத்தை சேர்ந்த முதியவருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவோர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News