செய்திகள்
கோப்புப்படம்

பாளையில் வாலிபர் வெட்டிக்கொலை- நாங்குநேரி கோர்ட்டில் 3 பேர் இன்று சரண்

Published On 2020-03-24 09:07 GMT   |   Update On 2020-03-24 09:07 GMT
நெல்லை பாளையங்கோட்டையில் பழிக்குப்பழியாக மனைவி மற்றும் மகன் கண்முன் வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் இன்று நாங்குநேரி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

நெல்லை:

நெல்லை அருகே உள்ள பாலாமடை இந்திரா நகரை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 29), கூலி தொழிலாளி. இவருடைய மனைவி பிச்சம்மாள் (வயது 25). இவர்களுக்கு சுவேதா (7) என்ற மகளும், வலதி என்ற மகனும் உள்ளனர்.

கடந்த 18-11-2018 அன்று பாளை வீரமாணிக்கபுரத்தை சேர்ந்த பால்துரை (20) என்பவர் பாலாமடையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முருகானந்தம் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் தினந்தோறும் நெல்லை கோர்ட்டுக்கு சென்று கையெழுத்திட்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை முருகானந்தம் வழக்கம்போல் நெல்லை கோர்ட்டுக்கு சென்று கையெழுத்திடுவதற்காக மொபட்டில் புறப்பட்டார். அப்போது அவருடைய மனைவி பிச்சம்மாள் மற்றும் மகன் வலதி ஆகியோரையும் அழைத்து சென்றார். அங்கு அவர் கையெழுத்திட்டு விட்டு, மொபட்டில் மனைவி, மகனுடன் ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.

பாளை அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள பிச்சிவன சாலை வழியாக சென்றபோது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் முருகானந்தத்தை சுற்றி வளைத்து கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டி கொன்றது. மனைவி, மகன் கண்முன்னே முருகானந்தத்தை வெட்டிக்கொலை செய்த 4 மர்மநபர்களும் மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றனர். இறந்த முருகானந்தத்தின் உடலை பார்த்து மனைவி, மகன் கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பாளை இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கொலை செய்யப்பட்ட முருகானந்தத்தின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் விசாரணையில் கடந்த 2018-ம் ஆண்டு பால்துரை கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய முருகானந்தத்தை கொலை செய்ய எதிர்தரப்பினர் திட்டம் தீட்டி நேற்று பழிக்குப்பழியாக வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து தலைமறைவான கொலையாளிகளை பிடிக்க, பாளை போலீஸ் இன்ஸ்பெக்டர் சோம சுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாரி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் கொலையாளிகளை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய பாளை அருகே உள்ள மேலக்குளம் கீழூரை சேர்ந்த மகராஜன்(27), வடக்கு தாழையூத்தை சேர்ந்த ஜேக்கப்(28) மற்றும் தென்கலம்புதூரை சேர்ந்த ராமமூர்த்தி(22) ஆகியோர் இன்று காலை நாங்குநேரி கோர்ட்டில் சரண் அடைந்தனர். இதில் தொடர்புடைய மேலும் ஒருவரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News