செய்திகள்
முல்லைப்பெரியாறு அணை - பென்னிகுக்

பென்னிகுக் நினைவுநாள்- மெழுகுவர்த்தி ஏந்தி விவசாயிகள் அஞ்சலி

Published On 2020-03-10 06:52 GMT   |   Update On 2020-03-10 06:52 GMT
கர்னல் ஜான் பென்னிகுக்கின் 109 வது நினைவுநாளை முன்னிட்டு, லோயர்கேம்பில் உள்ள அவரது நினைவு மணிமண்டபத்தில் பென்னிகுக் சிலைக்கு விவசாயிகள், பொதுமக்கள் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
கூடலூர்:

முல்லைப்பெரியாறு அணையை கட்டிய தென்தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய ஆங்கிலேயப்பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுக் 1911-ம் ஆண்டு மார்ச் மாதம் 9-ந் தேதி காலமானார். அவரது 109-வது நினைவுதினத்தை முன்னிட்டு, விவசாயிகள், பொதுமக்கள் லோயர்கேம்ப் மணிமண்டபத்தில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் விவசாயிகள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில், முல்லைப் பெரியாறு அணை மீட்புக்குழுவினர், கூடலூர் ஒக்கலிகர் இளைஞர் நல அறக்கட்டளை நிர்வாகி சிவசீனு உட்பட ஏராளமான விவசாயிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

அதுபோல் கம்பத்தில் உள்ள நேதாஜி ஆதரவற்றோர் இல்ல மாணவ, மாணவியர்கள் மணிமண்டபத்தில் உள்ள பென்னிகுக் சிலைக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். அவர்களுக்கு பென்னிகுக் வரலாறு குறித்தும், தமிழக அரசு மணிமண்டபம் கட்டியது குறித்தும் நிர்வாகி பஞ்சுராஜா விளக்கி கூறினார்.

மணிமண்டபத்தில் விவசாயிகள் கூறுகையில், முல்லைப் பெரியாறு அணையில் நாம் உரிமையை இழந்தது போதும். இழந்த உரிமையை மீட்க வேண்டும். உச்சநீதிமன்றம் நியமித்த கண்காணிப்பு குழுவின் ஆலோசனைக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களான, அணையில் 152 அடி தண்ணீர்த் தேக்க அடுத்தகட்ட நடவடிக்கை, பேபி அணையை பலப்படுத்தல், வள்ளக்கடவு பாதை சரிசெய்தல் போன்றவைகளை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.
Tags:    

Similar News