செய்திகள்
கொலை

சேலம் அருகே 1½ ஆண்டுகளுக்கு முன்பு மாயமான ரியல் எஸ்டேட் உரிமையாளர் கடத்திக்கொலை

Published On 2020-02-26 05:22 GMT   |   Update On 2020-02-26 05:22 GMT
சேலம் அருகே 1½ ஆண்டுகளுக்கு முன்பு மாயமான ரியல் எஸ்டேட் உரிமையாளர் கடத்திக்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்:

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள நாச்சம்பட்டி செலவடையை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 38). ரியல் எஸ்டேட் அதிபர்.

இவர் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றார். அதன் பின்னர் வீடு திரும்ப வில்லை. இதுகுறித்து அவரது மனைவி ரேவதி ஜலகண்டாபுரம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி அவரை தேடி வந்தனர்.

6 நாள் தேடுதல் வேட்டைக்கு பின் 24-ந் தேதி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குள் அனாதையாக கிடந்த ஒரு ஆண் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அது மாயமான ரியல் எஸ்டேட் அதிபர் சக்திவேல் உடல் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.

தொடர்ந்து இந்த கொலையில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வந்தனர். ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு இந்த கொலையில் தொடர்புடைய ஈரோட்டை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர்களான சீனிவாசன் (41), புஷ்பராஜ் (40) ஆகிய 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

ஈரோட்டை சேர்ந்தவர்கள் சீனிவாசன் (41), புஷ்பராஜ் (40). ரியல் எஸ்டேட் அதிபர்களான இவர்கள் இருவரும் சக்திவேலுடன் இணைந்து தொழில் செய்து வந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனைக்கு இருக்கும் நிலங்களை அறிந்து சக்திவேலை அழைத்து செல்வார்கள். பின்னர் அந்த நிலத்தை 3 பேரும் சேர்ந்து வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தனர்.

அப்போது சக்திவேல் அந்த நிலங்களுக்கு அதிக அளவில் முதலீடு செய்வதை அறிந்த 2 பேரும் அவரை ஏமாற்றி அழைத்து சென்று பணம் பறிக்க திட்டமிட்டனர். அதன்படி மேட்டுப்பாளையம் பகுதியில் நிலம் இருப்பதாக கூறி சம்பவத்தன்று சக்திவேலை அங்கு அழைத்து சென்றனர்.

அங்கு ஏற்கனவே தயாராக இருந்த 5 பேருடன் சேர்ந்து சக்திவேலுடன் பணம் கேட்டு மிரட்டினர். அப்போது அவர் பணம் இல்லை கூறியதால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் அவரை சரமாரியாக தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தார். பின்னர் அவரது உடலை மேட்டுப்பாளையம் பகுதியில் வீசி விட்டு அந்த கும்பல் தப்பி சென்றதும் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் 2 பேரும் போலீசில் சிக்கியதும் தெரிய வந்தது

மேலும் இந்த கொலை சம்பவத்தில் திருப்பூரை சேர்ந்த வெங்கடேசன் (46), முருகபாண்டி உள்பட 5 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள். அவர்கள் சிக்கினால் தான் கொலைக்கான முழுவிவரம் தெரியவரும் என்பதால் இந்த வழக்கில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட சக்திவேலுக்கு சிவப்பிரியா (15) என்ற மகளும், தர்‌ஷன் (12) என்ற மகனும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News