செய்திகள்
கழிவறை கோப்பையில் சிக்கிய வாலிபரின் கை

கழிவறை கோப்பையில் சிக்கிய வாலிபரின் கை - 1 மணி நேரம் போராடிய தீயணைப்பு படையினர்

Published On 2020-02-24 10:28 GMT   |   Update On 2020-02-24 11:48 GMT
கழிவறை கோப்பையில் தவறி விழுந்த கார் சாவியை எடுக்க முயன்ற வாலிபரின் கை சிக்கியதையடுத்து தீயணைப்புத்துறையினர் 1 மணி நேரம் போராடி அவரை மீட்டனர்.
மதுரை:

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த கண்ணன் மகன் மணிமாறன் (வயது 29). காண்டிராக்டர்.

இவர், உறவினருடன் காரில் மதுரை வந்தார். மதுரை பெத்தானியாபுரம் பைபாஸ் ரோட்டில் உள்ள பங்க்கில் காருக்கு பெட்ரோல் நிரப்பினார். பின்னர் அங்குள்ள கழிவறைக்கு சென்றார்.

அப்போது மணிமாறனின் சட்டைப்பையில் இருந்த கார் சாவி தவறி கழிவறை கோப்பையில் விழுந்தது. இதில் பதட்டமடைந்த அவர் உடனடியாக கோப்பைக்குள் கையை விட்டு சாவியை எடுக்க முயன்றார்.

ஆனால் கையை வெளியே எடுக்க முடியவில்லை. கை சிக்கிக்கொண்டது. இவரது அலறல் சத்தம் கேட்ட பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து வாலிபரின் கையை எடுக்க முயற்சி செய்தனர். ஆனால் பலனளிக்கவில்லை.

இதையடுத்து மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமையில் மீட்புப்பணித்துறையைச் சேர்ந்த 7 பேர் கொண்ட குழுவினர், சுத்தியலால் கோப்பையை உடைத்து மணிமாறனின் கையில் காயம் ஏற்படாதபடி அவரை மீட்டனர். கோப்பைக்குள் விழுந்த சாவியை எடுக்க முடியாமல் 2 மணி நேரம் போராடிய மணிமாறன் மயக்கமடைந்தார். பின்னர் அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த சம்பவம் மதுரை பைபாஸ் ரோடு பெட்ரோல் பங்க்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News