செய்திகள்
அமைச்சர் தங்கமணி

நாமக்கல்லில் மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டுவிழா - அமைச்சர் தங்கமணி ஆய்வு

Published On 2020-02-22 16:22 GMT   |   Update On 2020-02-22 16:22 GMT
நாமக்கல்லில் மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டுவிழா நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் தங்கமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல்:

நாமக்கல்லில் புதிய மருத்துவ கல்லூரிக்கு அடுத்த மாதம் (மார்ச்) 5-ந் தேதி அடிக்கல் நாட்டுவிழா நடைபெற உள்ளது. அதற்காக நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தின் பின்புறத்தில் பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டுவிழா நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.

இதற்கிடையே விழா நடைபெற உள்ள இடத்தை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டுவிழாவிற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் மெகராஜ் மற்றும் அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் தங்கமணி கூறியதாவது:-

சேந்தமங்கலத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள கலை கல்லூரியை வருகிற மார்ச் மாதம் 5-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து திறந்து வைக்க உள்ளார். அதன் பிறகு நாமக்கல்லில் மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுகிறார். 20 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்க உள்ளார். அந்த விழாவில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்கள் அறிவிக்கப்பட்டதில் அரியலூர், கரூர் ஆகிய இடங்கள் விடுபட்டதாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறியதற்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக பதில் அளித்தார். இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி, உதவி கலெக்டர் கோட்டைக்குமார், தாசில்தார் பச்சைமுத்து மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். 
Tags:    

Similar News