செய்திகள்
கோப்பு படம்

குமரி மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று மது விற்ற 18 பேர் கைது - 200 பாட்டில்கள் பறிமுதல்

Published On 2020-01-27 11:42 GMT   |   Update On 2020-01-27 11:42 GMT
குடியரசு தினத்தையொட்டி குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்ற 18 பேரை கைது செய்த போலீசார் 200 பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாகர்கோவில்:

குடியரசு தினத்தையொட்டி நேற்று குமரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து மாவட்டம் முழுவதும் அனுமதி இன்றி மது விற்பவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தர விட்டிருந்தார். அதன்படி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

கோட்டார் சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் மற்றும் போலீசார் நேற்று ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள் கீழ மறவன்குடியிருப்பு பகுதியில் வரும்போது அங்கு சந்தேகப்படும்படியாக 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில் அதே பகுதியை சேர்ந்த ராஜு (வயது 44), மகேஸ்வரன் (38) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் அந்த பகுதியில் அனுமதியின்றி மது விற்றதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து அவர்கள் மறைத்து வைத்திருந்த 14 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் குலசேகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரலிங்கம் மற்றும் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் திற்பரப்பு பகுதியில் வரும் போது போலீசாரை பார்த்ததும் வாலிபர் ஒருவர் ஓடினார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினார்.

அதில் அவர் அதே பகுதியை சேர்ந்த மனோஜ் (22) என்பதும், அந்த பகுதியில் அனுமதியின்றி மது விற்றதும் தெரியவந்தது. போலீசார் மனோஜை கைது செய்து அவரிடம் இருந்த 45 மதுபாட்டில்கள் மற்றும் ரொக்கப்பணம் ரூ.510-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.

கருங்கல், வடசேரி, தக்கலை, மார்த்தாண்டம், பூதப்பாண்டி, ஆரல்வாய் மொழி, கீரிப்பாறை ஆகிய பகுதிகளில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் அனுமதியின்றி மது விற்றதாக 18 பேர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 200 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News