செய்திகள்
சமீம் - தவுபீக்

சப்-இன்ஸ்பெக்டர் கொலை: பயங்கரவாதிகள் பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல்

Published On 2020-01-23 08:18 GMT   |   Update On 2020-01-23 08:18 GMT
சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை கொலை செய்ய பயங்கரவாதிகள் பயன்படுத்திய துப்பாக்கியை, எர்ணாகுளம் பஸ்நிலையம் அருகே உள்ள கழிவு நீர் ஓடையில் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாகர்கோவில்:

களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 8-ந்தேதி காவல் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டு கொல்லப்பட்டார்.

இது தொடர்பாக திருவிதாங்கோட்டைச் சேர்ந்த அப்துல் சமீம், நாகர்கோவில் இளங்கடையைச் சேர்ந்த தவுபீக் ஆகியோர் கடந்த 14-ந்தேதி கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவர் மீதும் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன. பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகவும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்தவர்கள்.

கைதான அப்துல் சமீம், தவுபீக் இருவர் மீதும் போலீசார் உபா சட்டப்பிரிவில் வழக்குப்பதிவுசெய்து பாளை. ஜெயிலில் அடைத்தனர். கடந்த 21-ந்தேதி இவர்கள் இருவரையும் போலீசார் 10 நாள் போலீஸ் காவலில் எடுத்தனர்.

போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட அப்துல் சமீம், தவுபீக் இருவரையும் போலீசார் நாகர்கோவில் நேசமணி நகர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். எஸ்.பி. ஸ்ரீநாத் சுமார் 2 மணி நேரத்திற்கும் அதிகமாக விசாரித்தார்.



அப்போது எஸ்.ஐ. வில்சனை சுட்டுக்கொல்ல பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் கத்தியை எங்கே? மறைத்து வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டனர். முதலில் இதற்கு பதில் சொல்லாமல் இருந்த அப்துல் சமீம், தவுபீக் இருவரும் பின்னர் தொடர்ச்சியான விசாரணைக்கு பிறகு கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் பற்றிய விவரங்களை தெரிவித்தனர்.

அப்துல் சமீம், தவுபீக் இருவரும் எஸ்.ஐ. வில்சனை சுட்டுக்கொல்ல பயன்படுத்திய துப்பாக்கியை சம்பவம் நடந்த களியக்காவிளை சோதனை சாவடியில் இருந்து கேரளா வழியாக பஸ்சில் தப்பிச் செல்லும் வழியில் வீசி விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து தனிப்படை போலீசார், அப்துல் சமீம், தவுபீக் இருவரையும் நேற்றிரவே நாகர்கோவிலில் இருந்து கேரளா அழைத்துச் சென்றனர்.

எர்ணாகுளம் பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு கழிவு நீர் ஓடையில் கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை பயங்கரவாதிகள் வீசி இருந்தனர். பயங்கரவாதிகள் அந்த இடத்தை போலீசாரிடம் அடையாளம் காட்டினர். அதைத்தொடர்ந்து அந்த பகுதியில் உள்ளவர்களின் உதவியுடன் கழிவு நீர் ஓடையில் வீசப்பட்டிருந்த துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கொலைக்கு பயன்படுத்திய கத்தியையும் மீட்க போலீசார் 2 பயங்கரவாதிகளிடமும் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

கத்தியையும் மீட்ட பின்பு, அப்துல் சமீம், தவுபீக் இருவரையும் கேரளாவில் இருந்து கர்நாடகா மாநிலம் உடுப்பிக்கு போலீசார் அழைத்துச் செல்வார்கள் என்று தெரிகிறது. மேலும் கொலை நடந்த களியக்காவிளை சோதனைச்சாவடிக்கும் அவர்களை அழைத்துச் சென்று போலீசார் ஆதாரங்களை திரட்ட உள்ளனர்.

அப்துல் சமீம், தவுபீக் இருவரும், அவர்களின் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டதற்கு பழிவாங்கவே சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை கொலை செய்ததாக போலீசார் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.

கைதான கூட்டாளிகள் தவிர இன்னும் 17-க்கும் அதிகமானோர் தென்மாநிலங்களில் பதுங்கி இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர். அவர்கள் யார்? யார்? என்பதை கண்டு பிடிக்கவும் போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

போலீஸ் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருக்கும் பயங்கரவாதிகள் குடியரசு தினத்தின்போது நாசவேலைகளில் ஈடுபடாமல் தடுக்கவும், முன் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதற்கிடையே எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கை என்.ஐ.ஏ. விசாரிக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. இதனால் இந்த வழக்கு விரைவில் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் விசாரிக்கப்படும் என தெரிகிறது.

இதற்கு முன்னோட்டமாக இப்போதே மத்திய உளவுத்துறை, ஐ.பி. மற்றும் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் இந்த வழக்கை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். மேலும் எஸ்.ஐ. வில்சன் கொலையில் கைதான அப்துல் சமீம், தவுபீக் இருவரையும் விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். ஓரிரு நாளில் அவர்களின் விசாரணையும் தீவிரமாகும் என்று தெரிகிறது.

Tags:    

Similar News